Published : 26 Aug 2024 05:30 AM
Last Updated : 26 Aug 2024 05:30 AM

ரூ.20,000 கொடுக்க முன்வந்த போது வாங்க மறுப்பு: பார்வையற்ற பூசாரியிடம் பாடம் கற்ற சுதா மூர்த்தி

சுதா மூர்த்தி

புதுடெல்லி: இன்போசிஸ் நிறுவனர் நாராயண மூர்த்தியின் மனைவி சுதா மூர்த்தி.எழுத்தாளராகவும், சமூக சேவகராகவும், நன்கொடையாளராகவும் இருக்கிறார். தனது வாழ்க்கை அனுபவங்களை அவ்வப்போது சுதா மூர்த்தி வெளியிட்டு வருகிறார். அப்படி ஒரு சம்பவம் தமிழ்நாட்டில் நடந்ததை அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

தமிழ்நாட்டில் ஒரு முறை பயணம் செய்த போது சுதா மூர்த்தியின் கார் பழுதடைந்து நின்றுள்ளது.அதை பழுது பார்க்கும் வரையில்அருகில் இருந்த கோயிலில் இருங்கள் என்று கார் ஓட்டுநர் கூறியுள்ளார். அதன்படி அந்த குக்கிராமத்தில் இருந்த கோயிலுக்கு அவர் சென்றிருக்கிறார். அங்கு பார்வையற்ற பூசாரியும் அவரது மனைவியும் இருந்துள்ளனர். அவர்கள் மிக சாதாரணமாக வசதிகள் இல்லாமல் இருந்துள்ளனர். எனினும் இருவரும் சுதா மூர்த்தியை அன்புடன் வரவேற்று கோயிலில் சுவாமிக்கு தீபாராதனை காட்டி பூஜை செய்துள்ளார் பூசாரி. அப்போது காணிக்கையாக 100 ரூபாயை சுதா மூர்த்தி வழங்கி உள்ளார்.

அத்துடன் இல்லாமல், அவர்களை வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.20,000 அனுப்பி வைப்பதாக பூசாரியிடம் சுதா மூர்த்தி கூறியுள்ளார். அதை வேண்டாமென்று பணிவுடன் மறுத்தார் பூசாரி. ‘‘நீங்கள் யார் என்று எனக்கு தெரியாது. ஆனால், உங்களிடம் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். இந்த தவறை உங்கள் வாழ்க்கையில் மறுபடியும் செய்யாதீர்கள்’’ என்று சுதா மூர்த்தியிடம் பூசாரி கூறிஉள்ளார்.

தொடர்ந்து பூசாரி கூறும்போது, ‘‘நீங்கள் கூறிய பணம் எங்கள் நிலைமையை மேம்படுத்திக் கொள்ள உதவும் என்பது உண்மைதான். ஆனால், நீங்கள் கொடுக்கும் பணம் எங்களுக்கு சுமையாக மாறிவிடும். தற்போது என்னையும் என் மனைவியையும் இந்த கிராமத்தினர் நன்கு கவனித்துக் கொள்கின்றனர். அதிக பணம் என்னிடம் இருப்பது தெரிந்தால், நான் இறந்துவிட வேண்டும் என்று அவர்கள் நினைக்கக் கூடும். அந்தப் பணத்தை எனது மரணத்துக்குப் பிறகு பெறலாம் என்று நினைக்க கூடும். தற்போது எங்களிடம் இருப்பதே போதும். உங்களிடம் இருப்பதை நினைத்து அமைதி கொள்ளவும் அதை அங்கீகரிக்கவும் கற்றுக் கொள்ள வேண்டும்’’ என்று கூறியுள்ளார்.

பெரும் கோடீஸ்வரரான சுதாமூர்த்திக்கு, பூசாரி சொன்ன வார்த்தைகள் வாழ்க்கையின் உண்மையை மீண்டும் நினைவூட்டியது போல் இருந்துள்ளது. உண்மையான செல்வம் என்பது பணம், பொருள் அல்ல, தன்னிடம் இருப்பதை மனநிறைவுடன் ஏற்றுக் கொண்டு வாழ்வதுதான் என்பதை பூசாரி கூறிய வார்த்தைகள் மூலம் தான் அறிந்து கொண்டதாக சுதா மூர்த்தி நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x