Last Updated : 26 Jun, 2018 04:10 PM

 

Published : 26 Jun 2018 04:10 PM
Last Updated : 26 Jun 2018 04:10 PM

அச்சுறுத்தல் எதிரொலி: பிரதமர் மோடியிடம் நெருக்கமாகச் செல்ல அமைச்சர்களுக்குக் கூட தடை: எஸ்பிஜி கிடுக்கிப்பிடி

பிரதமர் மோடியின் உயிருக்கு எப்போதும் இல்லாத வகையில் அச்சுறுத்தல் இருப்பதால், அவருக்கு அருகே மத்திய அமைச்சர்கள், உயர் அதிகாரிகள் செல்லத் தடைவிதித்து பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு பிரிவு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 7-ம் தேதி புனே போலீஸார் டெல்லி நீதிமன்றத்தில் கூறுகையில் டெல்லியில் ஒருவீட்டில் இருந்து சந்தேகத்துக்கு இடமானவகையில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். அதில் ஒருவரிடம் இருந்து கைப்பற்ற கடிதத்தில் மாவோயிஸ்ட்களுடன் தொடர்பு இருப்பது தெரியவந்தது. முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியை கொன்றசம்பவம் போன்று பிரதமர் மோடியைக் கொல்ல திட்டமிட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது எனத் தெரிவித்தனர்.

மேலும், சமீபத்தில் பிரதமர் மோடி மேற்கு வங்கம் சென்ற போது, அவரின் 6 அடுக்கு பாதுகாப்பையும் மீறி ஒருவர் உள்ளே புகுந்தார். இந்தச் சம்பவங்கள் அனைத்தும் பிரதமர் மோடிக்கு அச்சுறுத்தல் இருப்பதையே காட்டுகின்றன.

இதையடுத்து, மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், மத்திய உள்துறை செயலாளர் ராஜீவ் கவுபா, உளவுத்துறை இயக்குநர் ராஜீவ் ஆகியோர் பிரதமர் மோடியின் பாதுகாப்பு குறித்து சமீபத்தில் ஆய்வு நடத்தினார்கள்.

அப்போது பிரதமர் மோடியின் பாதுகாப்பை அனைத்து வகையிலும் மேம்படுத்த உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். மாவோயிஸ்ட் ஆதிக்கம் நிறைந்த மாநிலங்களான சத்தீஸ்கர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், ஒடிசா, மேற்கு வங்கம் ஆகியவற்றுக்குப் பிரதமர் மோடி செல்லும் அந்த மாநிலங்களின் போலீஸ் துறை தலைவர்கள் கூடுதல் விழிப்புணர்வுடன் செயல்பட்டு, பாதுகாப்பு அளிக்கவும் மத்திய உள்துறை சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும் 2019-ம் ஆண்டு நடக்கப்போகும் பொதுத்தேர்தலில் மோடி முக்கிய நபராக இருப்பார். அப்போது அவருக்கு பல்வேறு அச்சுறுத்தல்கள் நேரலாம் என்பதால் அவருக்குக் கூடுதல் பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து பிரதமர் மோடிக்குப் பாதுகாப்பு அளிக்கும் சிறப்பு பாதுகாப்பு குழுவினர்(எஸ்பிஜி) பல புதிய விதிமுறைகளை வகுத்துள்ளனர். அதில் மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள், உயரதிகாரிகள் யாரும் பிரதமர் மோடிக்கு நெருக்கமாகச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

சிறப்பு பாதுகாப்பு படையினர் அனுமதித்தபின்புதான் பிரதமர் மோடியை அமைச்சர்களோ, அதிகாரிகளோ நெருங்க முடியும். மேலும், 2019-ம் ஆண்டு பொதுத்தேர்தல் முடியும்வரை பாஜக சார்பில் பிரதமர் மோடி சாலையில் நடந்து செல்வதையும், வாகனத்தில் திறந்தவெளியில் செல்வதையும் மோடி தவிர்க்க வேண்டும் என்று சிறப்பு பாதுகாப்பு படையினர் சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பொதுக்கூட்டங்களில் மட்டும் பேசலாம், மற்றவகையில் பொதுமக்களிடம் சென்று கைகுலுக்குவது, தொடுவது, மாலைகள், பூங்கொத்துக்கள் போன்றவதை வாங்குவதைத் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளனர்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x