Published : 15 May 2018 08:44 PM
Last Updated : 15 May 2018 08:44 PM

கர்நாடகத்தில் ஆட்சி அமைப்பதில் இழுபறி?: ஆளுநர் முடிவு என்ன?

கர்நாடக மாநிலத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமைக்கப் போகிறதா அல்லது தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள பாஜகவா யார் அட்சி அமைக்கப் போகிறதா என்ற முடிவு தெரியாமல் இழுபறி நிலை நீடிக்கிறது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ், பாஜக, மஜத உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்தவர்கள், சுயேச்சைகள் உட்பட 2622 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். காங்கிரஸ், மஜத, இந்திய குடியரசு கட்சி, அதிமுக, ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் சார்பாக 30 தமிழர்களும் களமிறங்கினர். காங்கிரஸ் கட்சி 221, பாஜக 222, மஜத 199 தொகுதிகளில் நேருக்கு நேர் போட்டியிட்டன.

கடந்த 12-ம் தேதி 222 தொகுதிகளில் நடந்த தேர்தலில் 72.13 சதவீத வாக்குகள் பதிவாகின. கர்நாடகா முழுவதும் 58, 302 வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்பட்ட 75 ஆயிரம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பெட்டிகளில் வைத்து சீல்வைக்கப்பட்டு, மாநிலத்தின் 38 மையங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன. இந்த மையங்களுக்கு 24 மணி நேரமும், ஆயுதம் ஏந்திய போலீஸார் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

வாக்கு எண்ணி்க்கை முடிவில் பாஜக 104 தொகுதிகளிலும், காங்கிரஸ் 78 தொகுதிகளிலும், மதச்சார்பற்ற ஜனதா தளம் 37 தொகுதிகளிலும், பகுஜன் சமாஜ் கட்சி ஒரு தொகுதியிலும், கர்நாடக பிரக்யவந்த ஜனதா கட்சி ஒரு இடத்திலும், சுயேட்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளனர்.

இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 38 சதவீத வாக்குகளையும், பாஜக 36.2 சதவீத வாக்குகளையும், ஜேடிஎஸ் 18.4 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளனர்.

பதாமி, சாமுண்டீஸ்வர் தொகுதிகளில் போட்டியிட்ட சித்தாரமையா பதாமி தொகுதியில் 67,599 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். சாமுண்டீஸ்வரி தொகுதியில் தோல்வி அடைந்தார்.

பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா சிகாரிபுரா தொகுதியில் 86,983 வாக்குகள் பெற்று வெற்றிபெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் கோனி மாலதேசா 51,586 வாக்குகள் பெற்றார்.

ராம்நகரம் தொகுதியில் போட்டியிட்ட மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் வேட்பாளர் எச்டி குமாரசாமி 92,626 வாக்குகள் பெற்று பெற்றார். இவரை எதிர்த்து போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் 69,990 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார்.

பெங்களூருவில் உள்ள 5 மையங்கள் உட்பட கர்நாடகா முழுவதும் உள்ள 38 மையங்களில் இன்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. தொடக்கத்தில் காங்கிரஸ் கட்சிக்கும், பாஜவுக்கும் கடும் போட்டி இருந்த நிலையில், சிறிதுநேரத்தில் பாஜக முன்னிலை பெற்று தனிப்பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களில் முன்னிலையுடன் சென்றது இதனால், பாஜக மாநிலத்தில் தனித்து ஆட்சி அமைக்கும் என்று கூறப்பட்டது.

ஆனால், பிற்பகலுக்கு பின் அரசியல் களத்தில் பல்வேறு திருப்பங்கள் ஏற்பட்டன. காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை, மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இதனால், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி ஆட்சி அமைக்க ஆதரவு தருவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்தது, இதை ஜனதா தளம் கட்சியும் ஏற்றுக்கொண்டதையடுத்து, இரு கட்சிகளும் ஆளுநர் வாஜுபாயிடம் கடிதத்தை அளித்தனர். இதற்கிடையே பாஜக கட்சியும் தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் ஆட்சி அமைக்கக் கோரி ஆளுநரிடம் கடிதம் அளித்துள்ளது.

இந்நிலையில், ஆளுநர் வாஜுபாய் வாலா யாரை ஆட்சி அமைக்க அழைக்கப்போகிறார் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x