Published : 24 Aug 2024 08:13 AM
Last Updated : 24 Aug 2024 08:13 AM
புதுடெல்லி: பாஜகவில் உறுப்பினர் சேர்க்கை நாடு முழுவதும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்குகிறது. இதில் பாஜகவின் சிறுபான்மையினர் பிரிவு 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது.
பாஜகவின் ஓட்டு வங்கியாக சிறுபான்மையினர் இல்லை. முஸ்லிம்களில், பஸ்மந்தா பிரிவினரின் ஆதரவை பெற பாஜக முயற்சி மேற்கொண்டது. ஆனால் இது பலனளிக்கவில்லை. அதேபோல் சுஃபி சம்வத் மகா அபியன்திட்டம் போல சுஃபி சமுதாயத்தினரின் ஆதரவை பெறவும் கடந்த ஆண்டு பாஜக முயற்சி கொண்டது.
சமீபத்தில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலை முன்னிட்டு கேரளாவில் கிறிஸ்தவர்களின் ஆதரவை பெற பாஜக முயற்சி மேற்கொண்டது. இதில் பலன் கிடைத்ததால், திரிச்சூரில் நடிகர் சுரேஸ் கோபி மூலம் பாஜக முதல் வெற்றியை பெற்றது. இந்நிலையில் நாடு முழுவதும் உறுப்பினர் சேர்க்கையை வரும் செப்டம்பர் 1-ம் தேதி தொடங்க பாஜக முடிவு செய்துள்ளது.
இதில் சிறுபான்மையினர் பிரிவு 50 லட்சம் உறுப்பினர்களை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளது. இதற்காக கட்சி தலைமையகத்தில் பாஜக சிறுபான்மையினர் பிரிவு வரும் 27-ம் தேதி பயிலரங்கம் ஒன்றை நடத்துகிறது. இதில் சிறுபான்மையினர் அணி பொறுப்பாளர் துஷ்யந் குமார் கவுதம் மற்றும் மாநில பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இது குறித்து பாஜக சிறுபான்மையினர் பிரிவுதலைவர் ஜமால் சித்திக்கூறுகையில், ‘‘சிறுபான்மை யினத்தை சேர்ந்த 50 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க திட்டமிட்டுள்ளோம். இதற்காக பயிலரங்கம் நடத்தப்படும்’’ என்றார்.
இதில் உறுப்பினர்களை மிஸ்டு கால், க்யூஆர் கோடு, நமோ இணையதளம் மற்றும் கட்சியின் இணையதளம் ஆகியவற்றின் மூலம் சேர்ப்பது குறித்த பயிற்சி அளிக்கப்படும்.
பாஜகவில் சிறுபான்மையினர்களை சேர்க்கும் நடவடிக்கைக்கு பொறுப்பாளராக தேசிய செயற்குழு உறுப்பினர் ஜோஜோ ஜோஷ் நியமிக்கப்பட்டுள்ளார். நிசார் உசைன் ஷா, மவுலானா ஹபிப் ஹைதர், ஃபகிம் சைபி, முகமது சதாம் மற்றும் ஜப்ரீன் மகஜாபீன் ஆகியோர் துணை பொறுப்பாளர்களாக இருப்பர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT