Last Updated : 16 May, 2018 12:21 PM

 

Published : 16 May 2018 12:21 PM
Last Updated : 16 May 2018 12:21 PM

ஜேடிஎஸ், காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 14 பேரைக் காணவில்லை: மாயமானார்களா? கடத்தப்பட்டார்களா?

 கர்நாடகத்தில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதை தேசமே எதிர்பார்த்து இருக்கும் நிலையில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த இரு எம்எல்ஏக்கள், காங்கிரஸ் தரப்பில் 12 எம்எல்ஏக்கள் கூட்டத்துக்கு வரவில்லை அவர்கள் எங்கு சென்றார்கள், மாயமானார்களா அல்லது கடத்தப்பட்டார்களா என்பது பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அதேசமயம், ஆளுநர் வாஜுபாய் வாலாவை அவரின் இல்லத்தில் இன்று காலை சந்தித்துவிட்டு வெளியே வந்த பாஜக முதல்வர் வேட்பாளர் எடியூரப்பா, பாஜக ஆட்சி அமைப்பது உறுதி என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளதும் கவனிக்கத்தக்கது.

இதற்கிடையே காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருக்கும் லிங்காயத் சமூகத்தின் எம்எல்ஏக்களை இழுக்கும் முயற்சியில், குதிரைபேரத்தில் ஈடுபட்டுள்ளதாக காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டுகிறது.

கர்நாடகத்தில் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை.

ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு 78 இடங்களும், பாஜகவுக்கு 104 இடங்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம், பகுஜன் சமாஜ் கூட்டணிக்கு 37 இடங்களும், இதரகட்சிகளுக்கு 3 இடங்களும் கிடைத்துள்ளன.

தனிப் பெரும்பான்மை எந்தக் கட்சிக்கும் கிடைக்காத நிலையில், பாஜக மட்டுமே தனிப்பெரும் கட்சியாக மாநிலத்தில் உருவெடுத்துள்ளது. ஆட்சி அமைக்க 112 இடங்கள் தேவைப்படும் நிலையில், அந்தக் கட்சிக்கு இன்னும் 8 எம்எல்ஏக்கள் ஆதரவு இருந்தால் போதுமானது.

அதேசமயம், ஆளும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி இந்தத் தேர்தலில் பெருத்த பின்னடைவைச் சந்தித்துள்ளது. 78 இடங்களில் மட்டுமே அந்தக் கட்சி வென்றது. ஆனால், தான் ஆட்சி அமைக்க முடியாவிட்டாலும் பரவாயில்லை, பாஜகவை ஆட்சியில் அமரவிடக்கூடாது என்று ரீதியில் காய்களை காங்கிரஸ் நகர்த்தத் தொடங்கியது.

அதற்கு ஏற்றார்போல் மதச்சார்பற்ற ஜனதாதளம் கட்சிக்கு முதல்வர் பதவியை விட்டுக் கொடுத்து ஆட்சி அமைக்க கோரி ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் உறுதியளித்தது. இதற்கு ஜேடிஎஸ் தலைவர்கள் எச்.டி.தேவகவுடா, அவரின் மகன் குமாரசாமி ஆகியோர் சம்மதம் தெரிவித்தனர். இதையடுத்து, காங்கிரஸ் தலைவர்களும், மதச்சார்பற்ற ஜனதா தளம் தலைவர்களும் நேற்று ஆளுநர் வாஜுபாய் வாலாவை சந்தித்து ஆட்சி அமைக்கக் கோரினார்கள்.

அதேசமயம், தனிப்பெரும் கட்சி என்ற ரீதியில் பாஜகவினர் ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்கும் உரிமை கோரினார்கள். இதனால், ஆளுநர் யாரை ஆட்சி அமைக்க அழைக்கப்போகிறார் என்ற கேள்வி எழுந்தது.

இந்நிலையில், இன்று காலை பெங்களூரு நகரில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் நடந்தது. இந்தக் கூட்டத்தில் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் இரு எம்எல்ஏக்கள் ராஜ வெங்கடப்பா நாயகா, வெங்கட ராவ் நாதகவுடா ஆகியோர் வரவில்லை. இவர்கள் எங்கு சென்றார்கள் கடத்தப்பட்டார்களா?, அல்லது மாயமானர்களா? என்பது தெரியவில்லை.,

அதேபோல காங்கிரஸ் கட்சியின் எம்எல்ஏக்கள் கூட்டம் இன்று காலை மாநில அலுவலகத்தில் நடந்தது. இதில் அந்த கட்சியின் 78 எம்எல்ஏக்களில் 66 பேர் மட்டுமே பங்கேற்றனர், 12 எம்எல்ஏக்களைக் காணவில்லை என காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதனால், ஆட்சி அமைக்கும் நோக்கில் பாஜகவினர் குதிரை பேரத்தில் ஈடுபட்டத் தொடங்கிவிட்டார்களா? என்ற பேச்சு கர்நாடக அரசியல் வட்டாரத்தில் பரவலான பேச்சு எழுந்துவிட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x