Published : 15 May 2018 08:13 AM
Last Updated : 15 May 2018 08:13 AM

அலிகர் பல்கலைக்கழகத்துக்கு ஜாட் மன்னரின் பெயர்: ஹரியாணா அமைச்சர் வலியுறுத்தல்

உத்தரபிரதேசத்தில் உள்ள அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்துக்கு ஜாட் மன்னரான மகேந்திர பிரதாப் சிங்கின் பெயரை சூட்ட வேண்டும் என்று ஹரியாணா மாநில நிதியமைச்சர் கேப்டன் அபிமன்யு வலியுறுத்தியுள்ளார்.

ஏற்கனவே அலிகர் பல்கலைக்கழகத்தில் முகமது அலி ஜின்னா உருவப்பட விவகாரம் பூதாகரமாகியுள்ள நிலையில், பாஜக அமைச்சரின் இந்தக் கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசத்தின் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் இருக்கும் பாகிஸ்தான் தேசியத் தலைவர் முகமது அலி ஜின்னாவின் உருவப்படத்தை அகற்ற வேண்டும் என பாஜக எம்பி ஒருவர் தெரிவித்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழ்நிலையில், ஹரியாணா நிதியமைச்சர் கேப்டன் அபிமன்யு தெரிவித்திருக்கும் கருத்து மேலும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக, ஹரியாணா மாநிலம் ரிவாரியில் நேற்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பங்கேற்று அவர் பேசியதாவது:

அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகம் அமைந்திருக்கும் இடமானது, ஜாட் மன்னர் மகேந்திர பிரதாப் சிங் தானமாக வழங்கியது. மேலும், கல்விக்காக அவர் பெரும் பங்களிப்பை அளித்திருக்கிறார். எனவே, அலிகர் பல்கலைக்கழகத்துக்கு மகேந்திர பிரதாப் சிங்கின் பெயரை சூட்ட வேண்டும். ஆனால், அங்கு, இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைத்த முகமது அலி ஜின்னாவின் உருவப்படம் இருப்பது துரதிருஷ்டவசமானது. இந்த விவகாரம் தொடர்பாக அலிகர் பல்கலைக்கழகத் துணைவேந்தருக்கும் கடிதம் எழுதியுள்ளேன். இவ்வாறு கேப்டன் அபிமன்யு கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x