Published : 01 May 2018 08:27 AM
Last Updated : 01 May 2018 08:27 AM

நிறைவேறுகிறது - நூறாண்டு கால மின்சாரக் கனவு

ந்தியா - மற்றொரு சாதனையை எட்டிப் பிடித்து இருக்கிறது. மணிப்பூர் மாநிலத்தின் லீசாங் கிராமம், இரு நாட்களுக்கு முன்பு, மின் இணைப்பு பெற்றது. இதன் மூலம் இந்தியாவில் உள்ள 5,97,464 கிராமங்களையும் மின்சாரம் எட்டி இருக்கிறது. இந்தியாவில், மின் வசதி இல் லாத கிராமமே இல்லை என்கிற நிலை உருவாகி உள்ளதாக அதிகாரபூர்வமாக அரசு அறிவித்துள்ளது.

இந்தியாவில் மொத்தமாக சுமார் 37 கோடி குடும்பங்கள் உள்ளன. எல்லா வீட்டுக்கும் மின்சார இணைப்பு கிடைத்து விட்டதாகச் சிலர் தவறாக கருதி விட வேண்டாம். ஒரு கிராமத்தில் 10% வீடுகளுக்கு மின் வசதி இருந்தாலே, அந்த கிராமம் மின் இணைப்பு பெற்றதாகக் கணக்கில் கொள்ளப்படும். கடைசியாகக் கிடைத்த கணக்கின்படி, இன்னமும் சுமார் 13% குடும்பங்கள், மின் வசதி பெற வேண்டி உள்ளதாகத் தெரிகிறது.

இந்தியாவில், மின்சாரம் தொடர் பான சட்டங்கள், திட்டங்கள், பணிகள், நடவடிக்கைகள் நூறாண்டுக்கும் முன்பு தொடங்கின.

முதன்முதலில் மின்சாரம் 1897-ல் இந்தியாவில் அறிமுகம் ஆனது. வங்காளத்தில் டார்ஜிலிங் நகராட்சியில், நீர் மின்திட்டம், இமயமலைக் குன்று ஒன்றில் அருவியின் மீது நிறுவப்பட்டது. 130 கி.வா. மின்சாரம் கிடைத்தது. இரண்டு ஆண்டுகள் கழித்து 1899-ல் கல்கத்தாவில், விசைத் தொழிற்சாலை ( பவர் ப்ளாண்ட்) மூலம் 1000 கி.வா. மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. முதன் முதலில் தொடங்கப்பட்ட பெரிய அளவிலான நீர் மின்திட்டம், சிவசமுத்திரம், காவேரி ஆற்றின் மீது 1902-ல் எழுந்தது. விரைவிலேயே 1906-ம் ஆண்டு வாக்கில், மதராஸ், கான்பூர், டெல்லியில், ‘தெர்மல்’ மின் உற்பத்தி நிலையங்கள் தொடங்கின. 1914-ல் கிருஷ்ணா நதி மீது உருவான 50,000 கி.வா திறன் கொண்ட நீர்மின் உற்பத்தி நிலையம் முக்கிய அத்தியாயம் ஆகும்.

இந்திய விடுதலைக்கு 7 ஆண்டுகள் முன்னதாக, 1940-ல் எரிபொருள், விசை தொடர்பாக, நேரு தலைமையில், தேசிய திட்டக் கமிட்டி அமைக்கப் பட்டது. இந்தக் குழுதான் மாநில மின் வாரியங்களைப் பரிந்துரைத்தது. சுய அதிகாரம் கொண்ட தன்னாட்சி அமைப்புகளாக மாநில மின் வாரியங்கள்இருக்க வேண்டும் என்று முடிவானது. இதற்காக மின்சாரம் (சப்ளை) சட்டம் 1948 இயற்றப்பட்டது. 50 ஆண்டுகள் கழித்து, மின்சார ஒழுங்குமுறை கமிஷன் சட்டம் 1998 இயற்றப்பட்டது. ‘மின்சாரச் சட்டம் 2003’ நிறைவேறியது. இது, மின் உற்பத்தி, மின் பகிர்வுக்கு, தனியார் துறையை இருகரம் நீட்டி வரவேற்றது.

1950-ல் டெல்லியில்தான் மாநில மின்வாரியம் தோன்றியது. அப்போதைய பம்பாய், 1954-ல் பின் தொடர்ந்தது. 1950-களில் ஐந்தாண்டுத் திட்டங்கள் நடைமுறைக்கு வந்த பிறகு, மின்சார உற்பத்தி, சப்ளை துறை இமாலய வளர்ச்சி காண ஆரம்பித்தது. நீர், நிலக்கரி மூலம் மின் உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் அடுத்தடுத்து முளைக்கத் தொடங்கின. அதன்பின் மாநிலங்களில் அடுத்தடுத்து பல மின் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வந்தன.

இன்று நம் நாட்டின் மொத்த மின் உற்பத்தி...? 2017 எரிசக்தி புள்ளி விவர அறிக்கையின்படி, நாட்டின் மொத்த உற்பத்தித் திறன் - 302088 மெகா வாட். மத்திய எரிசக்தி அமைச்சகம், மத்திய மின்சார ஆணையம் சமீபத்தில் வெளியிட்டுள்ள தகவலின் படி, நமது உற்பத்தித் திறன் - 340527 மெகா வாட்.

மின் உற்பத்தி, மின் நுகர்வில் நாம் உலகில் 3-வது இடத்தில் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன் னும் நாம் கடக்க வேண்டிய தூரம் வெகு நீளம். சவால்களும் மிகக் கடினமானவை.

மரபு சாரா எரிசக்தி காற்றாலைகள், சூரிய ஒளி, குறைந்த செலவில் மின்சாரம் தயாரிக்க வழிகள் ஆராயப்படுகின்றன. சாமான்யனின் தோள்களில் அதிக பொருளாதாரச் சுமையை ஏற்றாமல், எல்லாக் குடும்பங்களுக்கும் தடையில்லா மின்சாரம் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. இது நிறைவேறுகிற நாளில், இந்தியக் குடியரசின் இன்றைய சாதனை இன்னமும் அர்த்தமுள்ளதாகும்.

விரைவில் கை கூடும். நம்புவோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x