Published : 20 Aug 2014 09:34 AM
Last Updated : 20 Aug 2014 09:34 AM

பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை ரத்து: மத்திய அரசுக்கு காங்கிரஸ் எதிர்ப்பு

பாகிஸ்தானுடனான பேச்சு வார்த்தையை இந்திய அரசு திடீரென ரத்து செய்துள்ளதற்கு காங்கிரஸ் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

காஷ்மீரில் உள்ள ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களுடன் இந்தியாவுக்கான பாகிஸ்தான் தூதர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதை கண்டித்து பாகிஸ்தான் இந்தியா வெளியுறவுத்துறை செயலர்கள் நிலையில் வரும் 25-ம் தேதி நடைபெறவிருந்த பேச்சு வார்த்தைக் கூட்டத்தை இந்திய அரசு ரத்து செய்தது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் மணீஷ் திவாரி செய்தியாளர்களிடம் கூறும்போது, “இந்தியாவுடன் பேச்சு நடத்து வதற்கு முன்னதாக (பிரிவினை வாத) ஹுரியத் மாநாட்டுக் கட்சித் தலைவர்களிடம் பாகிஸ்தான் பேச்சு நடத்துவது வழக்கமான நடைமுறைதான்.

இந்த பின்னணியை அறிந்து கொள்ளாத மத்திய அரசு, இஸ்லாமாபாத்தில் பாகிஸ் தானுடன் பேச்சு நடத்துவதற்கு முதலில் ஒப்புதல் அளித்தது. ஆனால், ஹுரியத் தலைவர்கள், பாகிஸ்தான் தூதரை சந்தித்துப் பேசிய பின் எதிர்ப்பு கிளம்பியது. இதையடுத்து நீண்ட உறக்கத்தில் இருந்து எழுந்து குரல் எழுப்புவது போல மத்தியில் உள்ள பாஜக அரசு பேச்சுவார்த்தையை ரத்து செய்துவிட்டது.

பாஜக அரசின் இந்நடவடிக் கையை பொருட்படுத்தாது, இப்போது மீண்டும் தங்களின் சந்திப்புகள் தொடரும் என்று பாகிஸ்தான் தூதரும், ஹுரியத் தலைவர்களும் கூறி வருகின்றனர். இப்போது மத்திய அரசு என்ன செய்யப்போகிறது? பாகிஸ்தான் தொடர்பாக இந்திய அரசின் நிலைப்பாடு என்ன என்பதை விளக்க வேண்டும்.

காஷ்மீரின் லடாக் பகுதியில் இந்திய எல்லைக்குள் 25 கி.மீ. வரை சீன ராணுவம் ஊடுருவி யுள்ளதாக தகவல்கள் வந்துள்ளது துரதிர்ஷ்டவசமானது. இது தொடர்பாக பாஜக அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது?” என்றார் மணீஷ் திவாரி.

மத்திய அரசு விளக்கம்

இதனிடையே மத்திய சட்டத்துறை அமைச்சர் ரவி சங்கர் பிரசாத் கூறும்போது, “பாகிஸ்தான் அரசு, ஒன்று எங்களுடன் (இந்திய அரசு) பேச வேண்டும் அல்லது பிரிவினைவாதத் தலைவர்களுடன் பேச வேண்டும் என்பதே எங்களின் கருத்து. இந்த விஷயத்தை ஆரம்பத்திலிருந்தே நாங்கள் வலியுறுத்தி வந்துள்ளோம். ஆனால், பாகிஸ்தான் அரசு முதலில் பிரிவினைவாதத் தலைவர் களுடன் பேச முடிவு செய்து விட்டது. இதே நிலை நீடித்தால் பேச்சுவார்த்தையை தொடர்ந்து நடத்துவது இயலாத காரியம் என்பதை ஏற்கெனவே நாங்கள் தெரிவித்துவிட்டோம்” என்றார்.

பாஜக மூத்த தலைவர் முக்தர் அப்பாஸ் நக்வி கூறும்போது, “ஒரு பக்கம் பிரிவினைவாதத்தையும், தீவிரவாதத்தையும் ஆதரிப்போம்; மறுபுறம் அமைதிப் பேச்சு நடத்துவோம் என்ற பாகிஸ்தானின் செயல்பாடுகளை எவ்வாறு ஏற்றுக்கொள்ள முடியும்?

பிரிவினைவாதம், தீவிரவாதம் தொடர்பான இந்தியாவின் கொள்கை ஒரேமாதிரியானது என்பதை பாகிஸ்தான் புரிந்து கொள்ள வேண்டும். அதே சமயம், இந்தியாவின் தலைமையில் மாற் றம் ஏற்பட்டுள்ளதையும் அந்நாடு உணர வேண்டும்” என்றார்.

ஹுரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் சயீத் அலி ஷா கிலானி கூறும்போது, “பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தையை மத்திய அரசு ரத்து செய்துள்ளது துரதிர்ஷ்ட வசமானது.

முந்தைய காங்கிரஸ் ஆட்சி யின்போதும், வாஜ்பாய் தலைமை யிலான பாஜக ஆட்சியின்போதும் பாகிஸ்தானுடன் நாங்கள் பேச்சு நடத்தியுள்ளோம். எனவே, தற் போது பேச்சுவார்த்தையை ரத்து செய்துள்ளதற்கு இதை ஒரு காரணமாக கூற முடியாது” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x