Published : 21 Aug 2024 02:55 PM
Last Updated : 21 Aug 2024 02:55 PM

2 சிறுமிகளுக்கு வன்கொடுமையால் மக்கள் கொந்தளிப்பு: பத்லாப்பூரில் இணைய சேவை முடக்கம், பள்ளிகள் மூடல்

தானே: மகாராஷ்டிரா மாநிலம் தானே மாவட்டத்திலுள்ள பத்லாப்பூரில் நான்கு வயதே நிரம்பிய 2 பள்ளிச் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியதால் நடந்த மிகப் பெரிய போராட்டத்தைத் தொடர்ந்து அங்கு புதன்கிழமை இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான பள்ளிகள் மூடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. இதை அறிந்த பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர். பத்லாபூரின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டம் நடந்தது. இந்தப் போராட்டங்களில் 17 போலீஸார், 8 ரயில்வே ஊழியர்கள் காயமடைந்தனர்.

இந்தப் போராட்டம் தொடர்பாக 72 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அதிகாரிகளின் தகவல்படி, நகரத்தில் சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்காக கூடுதல் போலீஸார் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர். நகரில் படிப்படியாக இயல்பு நிலை திரும்பிக்கொண்டிருக்கிறது.

இணைய சேவை முடக்கம்: இதுகுறித்து டிசிபி சுதாகர் பதரே கூறுகையில், "வன்முறை மற்றும் அதனைத் தொடர்ந்து நடந்த சம்பவங்களின் காரணமாக நகரில் இணைய சேவை நிறுத்தப்பட்டுள்ளது. நிலைமையை ஆராய்ந்து அதன் பின்பு படிப்படியாக சேவை திரும்ப வழங்கப்படும்" என்றார்.

பத்லாப்பூரின் மூத்த போலீஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "சிறுமிகள் பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதைக் கண்டித்து செவ்வாய்க்கிழமை நடந்த வன்முறையில் இரண்டு அதிகாரிகள் உட்பட 17 போலீஸார் காயமைடந்தனர். அவர்கள் உள்ளூரின் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தடை உத்தரவை மீறுதல், சட்டவிரோதமாக ஆயுதங்களுடன் கூடுதல், பொதுச் சொத்துகளைத் தாக்கி சேதப்படுத்துதல் உள்ளிட்டவைகள் தொடர்பாக 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கல்வீச்சு உள்ளிட்ட இதர குற்றங்கள் தொடர்பாக 40 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை அடையாளம் காணும் பணிகள் நடைபெற்று வருகிறது. அதற்காக சிசிடிவி, வீடியோ காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது" என்று தெரிவித்தார்.

ரயில்வே ஊழியர்கள் காயம்: அரசு ரயில்வே போலீஸ் கமிஷனர் ரவிந்தர ஷிஸ்வே கூறுகையில், "பத்லாபூர் ரயில் நிலையத்தில் நடந்த வன்முறை தொடர்பாக ஒரு வழக்குப் பதிவு செய்யப்பட்டு 32 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கல்வீச்சு சம்பவத்தில் அதிகாரிகள் உட்பட ஏழு முதல் எட்டு பேர் காயமடைந்துள்ளனர். தற்போது நிலைமை இயல்பாகவும் கட்டுக்குள்ளும் உள்ளது" என்றார்.

இதனிடையே, மழலையர் பள்ளிச் சிறுமிகள் இரண்டு பேரை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாக பள்ளியின் உதவியாளரை போலீஸார் ஆகஸ்ட் 17-ம் தேதி கைது செய்தனர். பள்ளியின் கழிவறையில் அவர் சிறுமிகளை பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கியாதாக புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் அதிகாரிகள் பணியிடை நீக்கம்: இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து பள்ளி நிர்வாகம் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், பெண் உதவியாளர் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்துள்ளது. அதேபோல், சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் வழக்கை விசாரிக்கும் பணியில் தவறியதாக மூத்த காவல் ஆய்வாளர் உட்பட மூன்று போலீஸ் அதிகாரிகளை மாநில அரசு செவ்வாய்க்கிழமை பணிநீக்கம் செய்துள்ளது.

சம்பவம் நடந்த பள்ளி பத்லாப்பூரின் பாஜகவைச் சேர்ந்த ஒருவரின் உறவினருக்குச் சொந்தமான பள்ளி என்று கூறப்படுகிறது. இதனிடையே, மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ், இந்த விவகாரத்தை விசாரணை செய்ய மூத்த ஐபிஎஸ் அதிகாரி ஆர்தி சிங் தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். முதல்வர் ஏக்நாத் ஷிண்டே பள்ளிக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கு விரைந்து முடிக்கப்படும், குற்றவாளிகள் தப்பிக்க முடியாது என்று தெரிவித்திருந்தார்.

இதனிடையே, பாலியல் துன்புறுத்தல் வழக்கில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டிருக்கும் மூத்த வழக்கறிஞர் உஜ்வால் நிகாம் செய்தி நிறுவனத்துக்கு அளித்த பேட்டி ஒன்றில், "இது ஒரு முக்கியமான வழக்கு. இதனை போலீஸ் அதிகாரிகள் பெரிதாக எடுத்துக்கொள்ளாதது வெட்கக்கேடானது. மூத்த போலீஸ் அதிகாரிகள் ஏன் புகாரினை ஏற்க மறுத்தார்கள் என்பது குறித்து விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்கப்படும். இதுபோன்ற வழக்குகளில் முக்கியமான விஷயம் என்னவென்றால், போலீஸார் விசாரணை மேற்கொள்ள தாமதித்தால், முக்கியமான சாட்சிகளை இழக்க நேரிடும் என்பதே" என்றார். சிறுமிகள் பாலியல் துன்புறுத்தல் விஷயத்தில் எதிர்க்கட்சிகள், மாநில அரசை குற்றம்சாட்டி வருகின்றன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x