Published : 21 Aug 2024 06:46 AM
Last Updated : 21 Aug 2024 06:46 AM
மும்பை: மகாராஷ்டிர மாநிலம் மும்பைக்கு அருகே 50 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள பத்லாப்பூர் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த ஒரு பள்ளியில் படித்து வந்த நான்கு வயதே நிரம்பிய 2 சிறுமிகளை பள்ளியில் பணிபுரியும் துப்புரவுத் தொழிலாளி ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தகவலை அறிந்த பொதுமக்கள், நேற்று பத்லாப்பூர் ரயில் நிலையத்தில் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் பலர் ரயில் தண்டவாளத்தில் இறங்கி ரயிலை மறித்துப் போராட்டம் நடத்தினர்.
இதனால் மும்பை சென்டிரல் ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் புறநகர் ரயில்கள் நிறுத்தப்பட்டன. இந்த ரயில் மறியல் போராட்டத்தால் மும்பையிலிருந்து பத்லாப்பூர் ரயில் நிலையம் வரையிலான ரயில் போக்குவரத்து வெகுவாகப் பாதிக்கப்பட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்தப் போராட்டம் காரணமாக 5 எக்ஸ்பிரஸ் ரயில்கள், கர்ஜாத்-பான்வெல் தடம் வழியாக சத்ரபதிசிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்துக்கு (சிஎஸ்எம்டி) அனுப்பப்பட்டன. 4 வயது சிறுமிகள் மீது நடந்த பாலியல் வன்கொடுமை வழக்கில் போலீஸார் தாமதமாக நடவடிக்கை எடுத்ததாகக் கூறிபொதுமக்கள் இந்த ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் பத்லாப்பூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து போலீஸார் பத்லாப்பூர் வந்து, பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டத்தினரை கலைந்து போகச் செய்தனர். காலை 10.10 மணி முதல் பிற்பகல் வரை இந்தப் போராட்டம் நீடித்தது.
இந்த ரயில் போராட்டம் காரணமாக பத்லாபூர் பகுதியிலுள்ள கடைகள், வர்த்தக நிறுவனங்கள் நேற்று அடைக்கப்பட்டிருந்தன. சம்பவம் நடந்த பள்ளிக்கும் நேற்று விடுமுறை விடப்பட்டு இருந்தது. மேலும் இந்தப் போராட்டத்தில் மும்பையைச் சேர்ந்த பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கலந்துகொண்டனர்.
இதுதொடர்பாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் தற்போது போலீஸ் காவலில் உள்ளார். அவரிடம் தீவிரமாக விசாரிக்கிறோம்” என்றார்.
இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி விரிவான அறிக்கை தருமாறு தாணே போலீஸ் கமிஷனருக்கு முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT