வயநாடு நிலச்சரிவு, கனமழையால் சுற்றுலா பயணிகள் இன்றி வெறிச்சோடிய தேக்கடி: வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாக வர்த்தகர்கள் வேதனை

படகு சவாரிக்காக குறைவான எண்ணிக்கையில் செல்லும் சுற்றுலா பயணிகள்.
படகு சவாரிக்காக குறைவான எண்ணிக்கையில் செல்லும் சுற்றுலா பயணிகள்.
Updated on
1 min read

குமுளி: வயநாடு நிலச்சரிவு, தொடர் கனமழையால் தேக்கடிக்கு சுற்றுலாப் பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துள்ளது. இதனால் வார நாட்களில் இங்குள்ள பல சுற்றுலாத்தலங்கள் வெறிச்சோடிக் காணப் படுகின்றன.

தேனி மாவட்டத்தில் தமிழக - கேரள எல்லையான குமுளி அருகே தேக்கடி அமைந்துள்ளது. பெரியாறு புலிகள் வனச்சரணாலய பகுதியான இங்கு படகு சவாரி, பசுமை நடை, பழங்குடியினர் கலைநிகழ்ச்சி, மலையேற்றம், வியூ பாய்ன்ட் உள்ளிட்ட ஏராளமான சுற்றுலாப் பகுதிகள் உள்ளன. இதனால் உள் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இங்கு அதிகம் வருவது வழக்கம்.

இந்நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டு 420-க்கும் மேற்பட்டோர் இறந்தனர். இதனால் கேரளாவுக்கு சுற்றுலா செல்ல ஏற்ற காலநிலை இது அல்ல என்ற எண்ணம் பலரிடமும் ஏற்பட்டுள்ளது. மேலும் தென்மேற்குப் பருவமழையும் தீவிரமடைந்துள்ளதால் அடிக்கடி இங்கு nகனமழை பெய்து வருகிறது.

இதுபோன்ற சூழ்நிலையால் தேக்கடிக்கு சுற்றுலா பயணிகள் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது. இதனால் வார நாட்களில் தேக்கடியின் பல பகுதிகள் வெறிச்சோடி காணப்படுகின்றன. சனி, ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாட்களில் மட்டும் குறைந்த அளவில் சுற்றுலாப் பயணிகள் வருகின்றனர். இதனால் ஹோட்டல், ஜீப், விடுதி உள்ளிட்ட சுற்றுலா சார்ந்த தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளன. நறுமண மற்றும் மசாலாப் பொருட்கள் விற்பனையும் குறைந்துள்ளது.

இதுகுறித்து ஜீப் ஓட்டுநர்கள் கூறும்போது, ‘‘வயநாடு துயரச் சம்பவத்துக்குப் பிறகு தேக்கடியில் சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்து விட்டது. இதனால் சுற்றுலா வர்த்தகம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. வார இறுதி மற்றும் அரசு விடுமுறை நாட்களில் வருபவர்களும் படகு சவாரி மட்டும் செல்கின்றனர். கதகளி, களரி, மோகினியாட்டம் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளும், பசுமை நடை, பழங்குடியினர் கலைநிகழ்ச்சி, சாகச மற்றும் முகாம் சுற்றுலாக்களும் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளன.

முன்பெல்லாம் முன்பதிவு செய்தால்தான் படகு சவாரி செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் தற்போது குறைவான பயணிகளே படகில் சவாரி செய்கின்றனர்’’ என்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in