கமகமக்கும் கண்ணூர் சிறை பிரியாணி: 5 ஆண்டில் ரூ.8.5 கோடி வருவாய்

கமகமக்கும் கண்ணூர் சிறை பிரியாணி: 5 ஆண்டில் ரூ.8.5 கோடி வருவாய்
Updated on
1 min read

திருவனந்தபுரம்: கடந்த 2010-ம் ஆண்டில் கேரள சிறைகளில், “புட் பார் பிரீடம்" என்ற திட்டம் தொடங்கப்பட்டது. இதன்படி சிறைகளில் ருசிருசியாய், கமகமக்கும் உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு கைதிகளுக்கு வழங்கப்பட்டன. அதோடு சிறைக் கைதிகள் தயாரித்த உணவு வகைகள் வணிக ரீதியாகவும் விற்பனை செய்யப்பட்டன.

திருவனந்தபுரம், திருச்சூர், கண்ணூர், கொல்லம், ஆலப்புழா, எர்ணாகுளம், கோழிக்கோடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள சிறைகளில் 21 வகையான உணவு வகைகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதில் கண்ணூர் சிறைக் கைதிகள் தயாரிக்கும் சிக்கன் பிரியாணி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இதுகுறித்து கண்ணூர் சிறை அதிகாரிகள் கூறியதாவது: “புட் பார் பிரீடம்" திட்டம்கண்ணூர் சிறையில் கடந்த 2012-ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்டது. சிறைக் கைதிகள் நாள்தோறும் பல்வேறு வகையான உணவு வகைகளை தயார் செய்து வருகின்றனர். இதில் சிக்கன் பிரியாணி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுஉள்ளது. நேரடியாகவும் ஆன்லைன் வாயிலாகவும் உணவு வகைகளை விற்பனை செய்து வருகிறோம். இதன்படி கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் ரூ.8.5 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

“புட் பார் பிரீடம்" திட்டத்தால் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது. அதோடு சிறைக் கைதிகளுக்கு தொழில் பயிற்சியும் வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் பயிற்சி பெற்ற கைதிகள், சிறையில் இருந்து விடுதலையான பிறகுசொந்தமாக ஓட்டல் நடத்த முடியும். இவ்வாறு கண்ணூர் சிறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

உணவு தானியங்கள், இறைச்சி விலை உயர்வு காரணமாக கேரள சிறைக் கைதிகள் தயாரிக்கும் உணவு வகைகளின் விலை கடந்த பிப்ரவரியில் உயர்த்தப்பட்டது. அதன்பிறகும் விற்பனை அமோக மாக நடைபெற்று வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in