Published : 18 Aug 2024 06:01 AM
Last Updated : 18 Aug 2024 06:01 AM

10 ஆண்டுகளுக்கு பிறகு சட்டப்பேரவை தேர்தல்: பலமுனை போட்டிக்கு தயாராகும் ஜம்மு காஷ்மீர்

ஸ்ரீநகர்: மொத்தம் 90 உறுப்பினர்களை கொண்ட ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவைக்கு செப்டம்பர் 18, 25, அக்டோபர் 1 ஆகிய தேதிகளில் 3 கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீரில் சட்டப்பேரவை தேர்தல் 10 ஆண்டுகளுக்கு முன், 2014 நவம்பர்-டிசம்பர் மாதங்களில் 5 கட்டங்களாக நடைபெற்றது.

ஜம்மு காஷ்மீரில் கடந்த 2014-ல்நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலுக்கு பிறகு மக்கள் ஜனநாயக கட்சியும் பாஜகவும் கைகோத்து கூட்டணி ஆட்சி அமைத்தன. எனினும் இந்த ஆட்சி 3 ஆண்டுகள் மட்டுமே நீடித்தது. 2018 ஜூனில் பாஜக ஆதரவை விலக்கிக் கொண்டதால் மெகபூபா முப்தி அரசு பதவி விலகியது. இதையடுத்து குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

கடந்த 2019-ல் ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு அங்கு 2 பிராந்திய கட்சிகள் உருவாகின. முன்னாள் அமைச்சர் அல்டாப்புகாரி தலைமையில் அப்னி கட்சியும் முன்னாள் முதல்வர் குலாம் நபி ஆசாத் தலைமையில் ஜனநாயக முற்போக்கு ஆசாத் கட்சியும் உருவாகின.

மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சியும் பாஜகவும் தலா 2இடங்களில் வென்றன. பாரமுல்லா தொகுதியில் திகார் சிறையில் இருக்கும் இன்ஜினீயர் ரஷீத் எனப்படும் ஷேக் அப்துல் ரஷீத் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

கவுன்சில் தேர்தல்: மக்களவைத் தேர்தலுக்கு முன் நடைபெற்ற மாவட்ட வளர்ச்சி கவுன்சில் தேர்தலில் தேசிய மாநாடு, பிடிபி, மக்கள் மாநாடு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் குப்கர் கூட்டணி என்ற பெயரில் இணைந்து போட்டியிட்டு 110 இடங்களில் வென்றன. எனினும் இக்கூட்டணி பின்னர் உடைந்ததால் மக்களவைத் தேர்தலில் தேசிய மாநாடு கட்சியும் பிடிபியும் எதிரெதிராக போட்டியிட்டன.

கடந்த மாதம் மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் யூசூப் தாரிகாமி எதிர்க்கட்சிகள் கூட்டத்தை கூட்ட முயன்றார். எனினும் சட்டப்பேரவை தேர்தலுக்கான கூட்டணியில் இக்கட்சிகள் ஆர்வம் காட்டாததால் இக்கூட்டம் பிறகு தள்ளிவைக்கப்பட்டது. எனினும் இன்டியாகூட்டணியை புதுப்பிக்க காங்கிரஸ்தலைவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது தொடர்பாக மாநில காங்கிரஸ் தலைவர் குலாம் அகமது மீர் கூறும்போது, “பாஜகவை தோற்கடிக்க கூட்டணி கட்சிகள் இணைந்துபோராட வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். எங்கள்தலைவர்கள் பல்வேறு கட்சிகளுடன் தொடர்பில் உள்ளனர்” என்றார்.

சமீபத்திய மக்களவைத் தேர்தலில் ஜம்மு பிராந்தியத்தில் பாஜகவின் மகத்தான வெற்றிக்கு பிறகு அக்கட்சித் தலைவர்கள் முதல்வர் பதவி மீது கண் வைத்துள்ளனர். எனினும் அப்பிராந்தியத்தில் சமீபத்திய தீவிரவாத தாக்குதல்கள் காரணமாக மக்களின் கோபத்தை எதிர்கொண்டு வருகின்றனர்.

ஜம்மு காஷ்மீரில் தேசிய மாநாடும் பாஜகவும் முக்கிய அரசியல் சக்திகளாக இருந்தாலும் காஷ்மீரில் சில தொகுதியில் பிடிபி வெற்றிபெற வாய்ப்புள்ளது.

சிறையில் உள்ள பாரமுல்லா எம்பி இன்ஜினீயர் ரஷீத், மக்களவைத் தேர்தலில் 14 சட்டப்பேரவை தொகுதிகளில் முன்னிலைவகித்தார். எனினும் சட்டப்பேரவை தேர்தலில் அவரது கட்சி வேட்பாளர்கள் இதை தக்கவைப்பது அவ்வளவு எளிதல்ல என கூறப்படுகிறது. மக்களவைத் தேர்தலில் ஜம்மு காஷ்மீரில் 58 சதவீத வாக்குகள் பதிவாகின.

10 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலை மக்கள் ஆர்வமுடன் எதிர்நோக்குவதால் வாக்கு சதவீதம் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x