முடா ஊழல் குற்றச்சாட்டு: முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் ஒப்புதல்

சித்தராமையா | கோப்புப் படம்
சித்தராமையா | கோப்புப் படம்
Updated on
1 min read

பெங்களூரு: மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையம் (முடா) ஊழல் தொடர்பாக முதல்வர் சித்தராமையா மீது வழக்கு தொடர கர்நாடக ஆளுநர் தவார் சந்த் கெலாட் ஒப்புதல் அளித்துள்ளார்.

க‌ர்நாடக முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு சொந்தமான 3.9 ஏக்கர் நிலத்தை மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு கழகம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கையகப்படுத்தியது. பார்வதியின் கோரிக்கைப்படி மைசூருவில் உள்ள விஜயநகரில் அவருக்கு மாற்று நிலம் ஒதுக்கப்பட்ட‌து. அவரிடம் கையகப்படுத்திய நிலத்தின் மதிப்பைவிட, மாற்றாக வழங்கப்பட்ட நிலத்தின் மதிப்பு பன்மடங்கு அதிகமாக இருந்ததால் சர்ச்சை ஏற்பட்டுள்ளது. இதில் ரூ.3 ஆயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதையடுத்து, ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளாகி உள்ள முதல்வர் சித்தராமையா பதவி விலக வேண்டும் என பாஜக, மஜத கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. இந்நிலையில், டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர், சித்தராமையாவுக்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதையடுத்து, "டி.ஜே. ஆபிரகாம், பிரதீப் மற்றும் சிநேகமாயி கிருஷ்ணா ஆகியோர் தாக்கல் செய்த மூன்று மனுக்களின் அடிப்படையில் முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்துள்ளார்" என்று கர்நாடக ராஜ்பவன் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜூலை 26 ம் தேதி, ஆளுநர் தவார் சந்த் கெலாட், முதல்வர் சித்தராமையாவுக்கு நோட்டீஸ் அனுப்பி இருந்தார். அதில், நீங்கள் ஏன் வழக்கை எதிர்கொள்ளக்கூடாது என்பதற்கு ஏழு நாட்களுக்குள் பதிலளிக்க கேட்டுக்கொண்டார். இதற்குப் பதிலளித்த கர்நாடக அமைச்சரவை, தனது அரசியல் சாசன அதிகாரத்தை ஆளுநர் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம்சாட்டி, முதல்வருக்கு வழங்கப்பட்ட நோட்டீஸை ஆளுநர் திரும்பப் பெற வேண்டும் என்று வலியுறுத்தியது.

முதல்வருக்கு எதிராக வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்திருப்பது குறித்த தகவல் தங்களுக்கு கிடைத்துள்ளதாக கர்நாடக முதல்வர் அலுவலகம் உறுதிப்படுத்தி உள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in