Last Updated : 31 Aug, 2014 10:34 AM

 

Published : 31 Aug 2014 10:34 AM
Last Updated : 31 Aug 2014 10:34 AM

ரயில்வே அமைச்சர் மகன் ஜாமீன் கேட்டு நீதிமன்றத்தில் மனு: நடிகையிடம் போலீஸார் 12 மணி நேரம் விசாரணை

மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் சனிக்கிழமை பெங்களூர் நீதிமன்றத்தில் ஜாமீன்கோரி மனு தாக்கல் செய்துள்ளார். இதனிடையே, கார்த்திக் மீது புகார் கொடுத்த நடிகை மைத்ரியிடம் 12 மணி நேரம் போலீஸார் தீவிர விசாரணை நடத்தின‌ர்.

தன்னை திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ஏமாற்றிவிட்டதாக மத்திய ரயில்வே அமைச்சர் சதானந்த கவுடாவின் மகன் கார்த்திக் கவுடா மீது கன்னட திரைப்பட நடிகை மைத்ரி கவுடா கடந்த 20-ம் தேதி போலீஸில் புகார் செய்தார்.

இதையடுத்து பெங்களூர் போலீஸார் கார்த்திக் மீது இந்திய தண்டனைச் சட்டம் 376, 420, 406 ஆகிய பிரிவுகளின் கீழ் பாலியல் ப‌லாத்காரம், மோசடி செய்தது, குற்றத்தை மறைக்க முயன்றது ஆகிய குற்றங்களுக்காக வழக்கு பதிவு செய்தனர். மேலும் அவரை விசாரணைக்கு ஆஜராகுமாறு கடந்த வெள்ளிக்கிழமை சம்மன் அனுப்பினர்.

விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாக இருந்த கார்த்திக், சனிக்கிழமை பெங்களூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். இம்மனுவை விசாரித்த நீதிபதி மஞ்சே கவுடா, விசாரணையை வரும் செப்டம்பர் 3-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

நடிகையிடம் விசாரணை

இதனிடையே, மைத்ரியிடம் பெங்களூர் மாநகர போலீஸ் கமிஷனர் எம்.என்.ரெட்டி முன்னி லையில் வெள்ளிக்கிழமை இரவு 3 மணி நேரம் விசாரணை நடத்தப் பட்டது. அதனைத் தொடர்ந்து சனிக்கிழமை காலை 9 மணிக்கு மீண்டும் தொடங்கிய விசாரணை மாலை 5 மணி வரை நடைபெற்றது.

அப்போது கார்த்திக் கவுடாவுக்கும் தனக்குமான காதல் குறித்து அனைத்தையும் எடுத்துரைத்ததாகவும், தனக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாகவும் மைத்ரி தெரிவித்தார். மேலும் கார்த்திக் உடன் தான் இருப்பது போன்ற புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், பேசிய ஆடியோ பதிவுகள் ஆகியவற்றை சமர்ப்பித்ததாகக் கூறினார்.

எந்த நேரமும் கைதாகலாம்

தலைமறைவாக இருக்கும் கார்த்திக் கவுடாவை கைது செய்ய போலீஸார் திட்டமிட்டுள்ளனர். செப்டம்பர் 3-ம் தேதிதான் ஜாமீன் மனு குறித்த விவரங்கள் தெரியும் என்பதால் அதற்கு முன்னதாக அவர் கைதாக வாய்ப்பிருப்ப தாக போலீஸ் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

மன உளைச்சல் அடைந்தேன்

இதுகுறித்து மத்திய அமைச்சர் சதானந்த கவுடா சனிக்கிழமை செய்தியாளர்களிடம் கூறும்போது, “அந்த பெண்ணின் (மைத்ரி) புகரால் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருக்கிறேன். எனது குடும்பத்தின் நிம்மதி பறி போய்விட்டது. இந்த புகாரை சிலர் அரசியலாக்க முயல்கின்றனர். அது முற்றிலும் தவறானது.

எனது மகன் கார்த்திக் மீதான புகார் குறித்து பாஜக மேலிடமோ, பிரதமர் மோடியோ என்னிடம் எவ்வித அறிக்கையும் கேட்கவில்லை. என் மகன் தவறு செய்திருந்தால் கண்டிப்பாக தண்டிக்கப்படுவான். ஆதலால் இந்த விவகாரத்தில் நான் தலை யிடவில்லை. உண்மை ஒருநாள் கண்டிப்பாக வெளிவரும். இப்பிரச்சினையை சட்டப்படி எதிர் கொள்வோம்” என்றார்.

செய்தி வெளியிட தடை

தன் மீதான பாலியல் புகாரையும், சதானந்த கவுடாவின் புகழை கெடுக்கும் செய்திகளை வெளியிடவும், நடிகை மைத்ரி பேட்டியளிக்கவும் தடை விதிக்க வேண்டும் என கார்த்திக் கவுடா பெங்களூர் அமர்வு நீதிமன்றத்தில் சனிக்கிழமை மனு தாக்கல் செய்தார்.

இதையடுத்து நீதிமன்றம் வெளியிட்ட உத்தரவில், டிவி9, சுவர்ணா, பப்ளிக் டிவி மற்றும் பெங்களூரிலிருந்து வெளியாகும் கன்னட தினசரி பத்திரிகைகள் உட்பட 12 செய்தி நிறுவனங்களுக்கு பாலியல் புகார் குறித்த செய்திகளை வெளியிட இடைக்கால தடை விதித்துள்ளது. இது பிற மொழி சேனல்கள், தினசரிகள், இணையதளங்களுக்கு பொருந்தாது என்றும் கூறப்பட்டுள்ளது. கார்த்திக் கவுடாவின் புகாரால் ஊடகங்களின் சுதந்திரம் பறிபோய் இருப்பதாக கன்னட ஊடகவியலாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x