Published : 16 Aug 2024 08:52 PM
Last Updated : 16 Aug 2024 08:52 PM
கொல்கத்தா: “கொல்கத்தா பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான உண்மை வெளிவர வேண்டும் என்று தனது அரசு விரும்புகிறது. ஆனால், சிலரோ மக்களை தவறாக வழிநடத்தும் வகையில் பொய்களை பரப்புகிறார்கள்” என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வெள்ளிக்கிழமை பேரணி நடத்தினார். அதன் தொடர்ச்சியாக, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு நீதியும், குற்றம் செய்தவர்களுக்கு மரண தண்டனையும் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மேலும் இது குறித்து அவர் கூறும்போது, “சமூக ஊடகங்களில் பொய்யான செய்திகளைப் பரப்புவதன் மூலம் உண்மையை மறைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தச் சம்பவத்தில் உண்மை வெளியே வர வேண்டும், ஆனால், சிலரோ மக்களிடையே தவறான தகவல்களை பரப்பி வருகிறார்கள். இடதுசாரிகளும், பாஜகவும் மேற்கு வங்கத்தில் அமைதியின்மையை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர்.
ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை சிபிஎம் கட்சியும், பாஜகவும் அடித்து நொறுக்கியதை நான் அறிவேன். நள்ளிரவு 12-1 மணிக்குள் அவர்கள் அங்கு சென்றிருப்பதை வீடியோக்கள் காட்டுகின்றன. பாஜகவினர் தேசிய கொடியுடன் அங்கு சென்றுள்ளனர். அவர்கள் தேசியக் கொடியை அவமதித்துவிட்டார்கள். இடதுசாரிகளுக்கும் பாஜகவுக்கும் இடையே உள்ள தொடர்பை அம்பலப்படுத்த வேண்டும். மணிப்பூரில் கொடுமையான சம்பவம் நடந்தபோது பாஜக, சிபிஎம் எத்தனை குழுக்களை அங்கு அனுப்பியது? அவர்கள் என்னை மிரட்ட வேண்டிய அவசியம் இல்லை” என்று தெரிவித்துள்ளார்.
பெற்றோர் சொன்னது என்ன? - தங்கள் மகள் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்ட சம்பவத்தில் அதே மருத்துவமனையைச் சேர்ந்த சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாக கொல்லப்பட்ட பெண் மருத்துவரின் பெற்றோர் தெரிவித்துள்ளதாக சிபிஐ அதிகாரி ஒருவர் இன்று (ஆக.16) தெரிவித்துள்ளார். மேலும் அவர், "தங்கள் மகளின் பாலியல் வன்கொடுமை மற்றும் கொலைக்கு பின்னால் பல நபர்களின் தொடர்பு இருப்பதாக சந்தேகிப்பதாகவும், குறிப்பாக தங்கள் மகளுடன் பணிபுரியும் சில பயிற்சியாளர்கள் மற்றும் மருத்துவர்கள் மீது தங்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் கூறி உள்ளனர். அவர்களின் பெயர்களையும் எங்களுக்கு கொடுத்துள்ளனர்.
சந்தேகத்தின் அடிப்படையில் பலரை நாங்கள் விசாரிக்க இருக்கிறோம். குறைந்தது 30 பேரை நாங்கள் விசாரணைக்கு அழைத்துள்ளோம். அவர்களில் சிலரிடம் நாங்கள் ஏற்கனவே விசாரணை தொடங்கிவிட்டோம்" என்று தெரிவித்துள்ளார்.
24 மணி நேர போராட்டத்துக்கு அழைப்பு: இதனிடையே, மேற்கு வங்கத்தில் பெண் மருத்துவர் கொலை சம்பவத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் நாளை (ஆக.17) 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாக இந்திய மருத்துவர்கள் சங்கம் அறிவித்துள்ளது. இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள இந்திய மருத்துவர்கள் சங்கம், “கொல்கத்தா ஆர்.ஜி. மருத்துவ கல்லூரியில் நடந்த கொடூர குற்றம் மற்றும் சுதந்திர தினத்தன்று போராட்டம் நடத்திய மாணவர்கள் மீது கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், நாடு முழுவதும் ஆகஸ்ட் 17 அன்று காலை 6 மணி முதல் ஆகஸ்ட் 18 ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை 24 மணி நேரம் மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்.
அதே நேரம் அனைத்து விதமான அத்தியாவசிய சேவைகளும் செயல்படும். அவசர நோயாளிகளை மருத்துவர்கள் பார்ப்பார்கள். ஆனால் வழக்கமான வெளிப்புற நோயாளிகளுக்கான சிகிச்சைகள் செயல்படாது மற்றும் அவரசம் இல்லாத அறுவை சிகிச்சைகள் செய்யப்படாது. நவீன மருத்துவர்கள் தங்கள் சேவைகளை வழங்கும் அனைத்து துறைகளிலும் இந்த பணி புறக்கணிப்பு நடைபெறும். மருத்துவர்களின் நியாயமான போராட்டத்துக்கு தேசத்தின் ஆதரவை இந்திய மருத்துவர்கள் சங்கம் கோருகிறது” என்று தெரிவித்துள்ளது.
ஐஎம்ஏ வலியுறுத்தல்: இதனிடையே, “நாடு முழுவதும் உள்ள அனைத்து மருத்துவமனைகளும், விமான நிலையங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட மண்டலங்களாக அறிவிக்கப்பட வேண்டும். அப்போதுதான் மருத்துவர்கள் அச்சமின்றி பணியாற்ற முடியும்” என்று இந்திய மருத்துவ சங்கமான ஐஎம்ஏ தலைவர் டாக்டர் ஆர்.வி.அசோகன் தெரிவித்தார்.
ஆளுநர் ஆனந்த போஸ் சாடல்: முன்னதாக, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள ஆளுநர் ஆனந்த போஸ், “இந்தப் பிரச்சினையை காவல் துறை மிக மோசமாகக் கையாண்டுள்ளது. அங்கு (ஆர்.ஜி. கர் மருத்துவமனை) நடந்தது எந்த நாகரிக சமுதாயத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்கக் கூடிய ஒன்று. எந்தக் காவல் துறையும் இப்படி நடந்துகொண்டிருக்காது. மருத்துவமனை மீதான தாக்குதலை காவல் துறை தடுத்திருக்க வேண்டும். அதற்கேற்ப போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்க வேண்டும். அந்த இடத்துக்கு விரைந்து சென்று போலீஸார் விசாரணையை ஆரம்பித்திருக்க வேண்டும். ஆனால், இவை எதுவும் நடக்கவில்லை.
மருத்துவமனையில் நிகழ்ந்த மிக மோசமான குற்றத்தின் தடயங்களை அழிக்க யாரோ எங்கிருந்தோ முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள் என்பது நன்றாக தெரிகிறது. மாணவியின் மரணம் தற்கொலையா என்ற சந்தேகத்தை எழுப்பியது யாரோ செய்த கேவலமான செயல். இது முழுக்க முழுக்க காவல்துறையினரால் தவறாக நிர்வகிக்கப்படுகிறது” என குற்றம் சாட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
வழக்கும் வன்முறையும்: கடந்த ஆக. 8-ம் தேதி மேற்கு வங்கம் கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணியாற்றி வந்த பெண் முதுநிலை பயிற்சி மருத்துவர் (31), பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொடூரமான முறையில் கொல்லப்பட்டார். இந்த கொலை வழக்கில் தொடர்புடையதாக சஞ்சய் ராய் (33) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த வழக்கு விசாரணையை கொல்கத்தா போலீஸிடம் இருந்து சிபிஐ-க்கு மாற்றி கொல்கத்தா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
பெண் மருத்துவரின் படுகொலையைக் கண்டித்து நாடு முழுவதும் மருத்துவர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே, சுதந்திர தினத்துக்கு முந்தைய இரவு கிராமப் பெண்கள் கையில் தீப்பந்தம் ஏந்தி பேரணி நடத்தினர். நகர்ப்புறங்களில் கையில் மெழுகுவர்த்தி ஏந்தியும், அலைபேசியின் டார்ச் லைட்-ஐ ஒளிரவிட்டும், “எங்களுக்கு நீதி வேண்டும்” என்று பெண்கள் கோஷமிட்டனர். ஆர்.ஜி. கர் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவில், போராட்டக்காரர்கள் போல மருத்துவமனைக்குள் புகுந்த மர்ம கும்பல் தாக்குதல் நடத்தியது. அங்கிருந்த மருத்துவ சாதனங்களை சேதப்படுத்தி, பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீஸார் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீதும் கல் வீசி தாக்கினர். இதில் 15 போலீஸார் காயமடைந்திருப்பதாக கூறப்படுகிறது. இதனால், அச்சமுற்ற மருத்துவர்களில் 20 பேர் கொண்ட குழு, மேற்கு வங்க ஆளுநர் ஆனந்த் போஸை நேற்று காலை சந்தித்து பாதுகாப்பு கோரியது. ஆளுநரை சந்தித்துப் பேசிய மருத்துவர்களில் பெரும்பாலானோர் பெண்களாக இருந்தனர்.
அதேவேளையில், “இந்தக் கொலை வழக்கை சிபிஐயிடம் ஒப்படைக்க தயார் என்று நானே கூறியிருந்தேன். இப்போது நீதிமன்றமே உத்தரவிட்டுள்ளதால், நிம்மதி பெருமூச்சு விடுகிறேன். இந்த படுகொலைக்குக் காரணமான குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும். இந்த சந்தர்ப்பத்தில் போராட்டக்காரர்களிடம் நான் மன்றாடுகிறேன். உங்கள் பாதங்களில் விழுந்தால் நீங்கள் சமாதானம் அடைவீர்கள் என்றால் அதற்கும் தயார். நீங்கள் போராடத் தொடங்கி ஐந்து நாட்கள் கடந்துவிட்டன. இதுவரை யாரும் உங்களைத் தடுக்கவில்லை. ஆனால், ஒரு குழந்தை, ஒரு கர்ப்பிணி உள்பட மூவர் உயிரிழந்துவிட்டனர். எல்லோர் முன்னிலையிலும் உங்களை வேண்டிக் கேட்டுக் கொள்கிறேன் தயவு செய்து போராட்டத்தைக் கைவிடுங்கள்” என்று மம்தா பானர்ஜி வேண்டுகோள் விடுத்திருந்ததும் கவனிக்கத்தக்கது.
இதற்கிடையில், ஆர்.ஜி.கர் அரசு மருத்துவமனையை தாக்கிய மர்ம கும்பலைச் சேர்ந்தவர்களில் 19 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளதாக கொல்கத்தா போலீஸ் தெரிவித்தது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT