Last Updated : 02 May, 2018 05:48 PM

 

Published : 02 May 2018 05:48 PM
Last Updated : 02 May 2018 05:48 PM

ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற பெண் அதிகாரியைச் சுட்டுக் கொலை செய்த ஹோட்டல் அதிபர்: தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிவு

 

இமாச்சலப்பிரதேசத்தில் கசாலி நகரில் ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற பெண் அதிகாரியைத் துப்பாக்கியால் சுட்டு ஹோட்டல் அதிபர் கொலை செய்துள்ளார்.

அரசு அதிகாரியைப் பட்டப்பகலில் சுட்டுக் கொலை செய்ததற்குப் பாதுகாப்பு அளிக்காத சூழல் குறித்து வேதனை தெரிவித்து, தானாக முன்வந்து, உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கு 3-ம் தேதி விசாரணைக்கு வருகிறது.

சட்டவிரோத கட்டிடங்கள்

இமாச்சலப் பிரதேசத்தில் பாஜக தலைமையிலான ஆட்சி நடந்து வருகிறது. அங்கு முதல்வராக ஜெய் ராம் தாக்கூர் இருந்து வருகிறார். இமாச்சலப் பிரதேச மாநிலம் கசாலி நகரில் சட்டவிரோதமாக பலமாடிக் கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது குறித்து வழக்கு ஒன்று உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இடிக்க உத்தரவு

இந்த வழக்கு மீது கடந்த 17-ம்தேதி உத்தரவு பிறப்பித்த உச்ச நீதிமன்றம், கசாலி நகரில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள அனைத்துக் கட்டிடங்களையும், ஆக்கிரமிப்புகளையும் அகற்ற பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டது.

நிலச்சரிவு ஏதும் ஏற்பட்டால் கட்டிடங்கள், வீடுகள் சரிந்து பெரும்விபத்து ஏற்படும். 2 மாடி கட்டிடங்கள் கட்டுவதற்குக் கொடுக்கப்பட்ட அனுமதியில் 6 மாடிகள் கட்டப்பட்டுள்ளன. பணம் ஈட்டுவதற்காக மக்களின் உயிரைப் பணயம் வைக்கிறார்கள் என்று கூறி அனைத்துக் கட்டிடங்களையும் இடிக்க உத்தரவிட்டது.

துப்பாக்கிச் சூடு

இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அமல்படுத்தும் நோக்கில், நேற்று நகரத் துணை திட்டஅலுவலர் சைல் பாலா சர்மா கசாலி நகரத்தில் சென்று ஆக்கிரமிப்பு பணிகளை மேற்கொண்டார்.

அப்போது, கசாலி நகரில் உள்ள நாராயணி கெஸ்ட் ஹவுஸ் முதலாளி விஜய் தாக்கூருக்கும், நகரத் துணை திட்ட அலுவலர் சைல் பாலா சர்மாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த வாக்குவாதம் முற்றியதையடுத்து, தாக்கூர் தனது கையில் வைத்திருந்த துப்பாக்கியால் சைல் பாலா சர்மாவை நோக்கி 3 முறை சுட்டார். இதில் படுகாயமடைந்த அவரை தரம்பூர் மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். ஆனால், அவர் சிகிச்சை பலன அளிக்காமல் உயிரிழந்தார்.

மேலும், இந்த துப்பாக்கிச் சூட்டில் குண்டு தவறிப் பாய்ந்ததில் ஹோட்டல் அறையைச் சுத்தம் செய்து கொண்டு இருந்த குலாப் சிங் என்பவர் காயமடைந்தார். திட்ட அலுவலரை சுட்டுக்கொலை செய்த விஜய் தாக்கூர் தப்பி ஓடிவிட்டார்.

உச்ச நீதிமன்றம் வழக்கு

இந்தக் கொலை சம்பவம் குறித்து தானாக முன்வந்து உச்ச நீதிமன்றம் வழக்குப் பதிவு செய்தது. இந்த வழக்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் மதன் பி லோக்கூர், தீபக் குப்தா ஆகியோர் ஆகியோர் விசாரணைக்கு எடுத்தனர்.

அப்போது நீதிபதிகள் கூறுகையில், ‘ உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை நிறைவேற்றச் சென்ற அதிகாரி ஒருவர் பணி நேரத்தில் அதுவும் பட்டப்பகலில் சுட்டுக்கொல்லப்பட்டது மிகவும் கவலைப்படவேண்டிய விஷயமாகும். ஆனால் இதுவரை கொலை செய்தவரை போலீஸார் கைது செய்யவில்லை. ஆக்கிமிப்பை அகற்றப் பெண் அதிகாரிக்கும் போதுமான பாதுகாப்பும் அளிக்கவில்லை. இந்த வழக்கை நாங்கள் தாமா விசாரணைக்கு எடுத்திருக்கிறோம். இந்த வழக்கு வரும் 3-ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x