முகத்தில் மிளகாய் பொடி தூவி தெலுங்கு தேசம் தொண்டர் கொலை: ஆந்திராவில் தொடரும் அரசியல் தாக்குதல்கள்

முகத்தில் மிளகாய் பொடி தூவி தெலுங்கு தேசம் தொண்டர் கொலை: ஆந்திராவில் தொடரும் அரசியல் தாக்குதல்கள்
Updated on
1 min read

கர்னூல்: முகத்தின் மீது மிளகாய் பொடி தூவி தெலுங்கு தேசம் கட்சித் தொண்டரை ஒரு மர்ம கும்பல் படுகொலை செய்து விட்டு தப்பியோடியது. அரசியல் பகைமை காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாகத் தெரிகிறது.

ஆந்திர மாநிலத்தில் அரசியல் மற்றும் சினிமா துறையில் இருபிரிவினருக்கிடையே பல ஆண்டுகளாக ஒரு யுத்தகாண்டமே நடந்து வருகிறது. ஆந்திராவில் ரெட்டி அல்லது நாயுடு சமூகத்தைச் சேர்ந்தவர்களே மாறி மாறி ஆட்சிக்கு வருகின்றனர். வேறு சமூகத்தினர் ஆட்சிக்கு வர முடிவதில்லை. இது அனைத்து துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனால் இந்த 2 சமூகத்தினர் இடையே அடிக்கடி மோதல், கொலைச் சம்பவங்கள் நடந்தேறி வருகின்றன.

இந்நிலையில் கர்னூல் மாவட்டத்தில் தெலுங்கு தேசம் தொண்டர் படுகொலை செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்னூல் மாவட்டம், பத்திகொண்டா தொகுதி தெலுங்கு தேசம் கட்சி எம்எல்ஏவான சியாம்பாபுவின் தீவிர ஆதரவாளர் ஸ்ரீநிவாசுலு (45). இவர் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் சியாம்பாபு வெற்றி பெற இரவும், பகலும் உழைத்துள்ளார். இந்நிலையில் நேற்று அதிகாலை பத்திகொண்டா மண்டலம், ஹூசூருஎனும் கிராமத்தில் உள்ள தனதுவீட்டின் அருகே வயல்வெளிக்கு ஸ்ரீநிவாசுலு சென்றுள்ளார்.

அங்கு அவரைப் பின் தொடர்ந்து வந்த ஒரு மர்ம கும்பல், முகத்தின் மீது மிளகாய் பொடி தூவி, அவரை சரமாரியாக வெட்டி விட்டு தப்பி விட்டது. அவரதுஅலறல் சத்தம் கேட்டு, அங்கிருந்தவர்கள் ஓடிச் சென்று பார்த்தனர். அதற்குள் ஸ்ரீநிவாசுலு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார்.

இது குறித்து தகவல் கிடைத்ததும், கர்னூல் மாவட்ட போலீஸ் எஸ்பி பிந்து மாதவ், எம்.எல்.ஏ சியாம்பாபு உள்ளிட்டோர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். கொலை சம்பவம் குறித்து கிராம மக்களிடம் போலீஸார் விசாரித்தனர்.

2 தனிப்படை: அந்த கிராமத்தில் யாருக்கும் ஸ்ரீநிவாசுலு மீது பகை கிடையாது. ஆதலால், இது அரசியல் கொலைதான் என்னும் முடிவுக்கு போலீஸார் வந்துள்ளனர். கொலையாளிகளை பிடிக்க 2 தனிப்படை அமைத்துள்ளதாக எஸ்பி பிந்து மாதவ் தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in