

புதுடெல்லி: ஜம்மு காஷ்மீரில் கடந்த சிலமாதங்களாக தீவிரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. கதுவாவில்ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதேபோல் தோடா மற்றும் உதம்பூரில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. இந்தாண்டில் கடந்த ஜூலை 21-ம் தேதி வரை நடைபெற்ற தாக்குதல்களில் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினர் உட்பட 28 பேர் உயிரிழந்தனர்.
குப்வாரா மாவட்டத்தில் எல்லைக்கட்டுப்பாடு கோடு அருகே பாகிஸ்தான் எல்லை பாதுகாப்பு படையினர் கடந்த மாதம் நடத்தியதாக்குதலை இந்திய ராணுவத்தினர் வெற்றிகரமாக முறியடித்தனர். கோகர்னாக் வனப்பகுதியில் தீவிரவாதிகளை தேடும் பணியில்பாதுகாப்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அனந்நாக் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தீவிரவாத தாக்குதலில் 2 வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீரின் தோடா மாவட்டத்தில் நேற்று நடந்த தேடுதல் வேட்டையில் ராணுவ கேப்டன் தீபக் சிங் வீரமரணம் அடைந்தார். தீவிரவாதி ஒருவரும் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இந்நிலையில் ஜம்மு காஷ்மீர் பாதுகாப்பு நிலவரம் குறித்து, உயர்நிலைக் கூட்டத்தில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆலோசனை நடத்தினார். இதில் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர துவிவேதி, பாதுகாப்புத்துறை செயலாளர், ராணுவ ஆபரேஷன்களுக்கான தலைமை இயக்குநர் உட்பட பலர் கலந்து கொண்டனர். தீவிரவாதஊடுருவலை தடுப்பது, காஷ்மீரில்பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்து இதில் ஆலோசிக்கப் பட்டது.