Published : 10 Aug 2024 04:24 AM
Last Updated : 10 Aug 2024 04:24 AM
புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு செல்கிறார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட மக்களை அவர் நேரில் சந்தித்து பேச உள்ளார்.
கேரள மாநிலம், வயநாடு பகுதியில் பெருமழை காரணமாக கடந்த 30-ம் தேதி அதிகாலை நிலச்சரிவுகள் ஏற்பட்டன. இதன்காரணமாக முண்டக்கை, சூரல்மலை, அட்டமலை, நூல்புழா பகுதிகள் முழுமையாக மண்ணில் புதைந்தன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் 11-வது நாளாக நேற்று மீட்புப் பணி நடைபெற்றது. இதுவரை 427 பேர் உயிரிழந்துள்ளனர். 273 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். 138 பேரை காணவில்லை.
இந்த சூழலில் பிரதமர் நரேந்திர மோடி இன்று வயநாடு செல்கிறார். சிறப்பு விமானம் மூலம் கண்ணூர் விமான நிலையத்தில் இன்று காலை 11 மணிக்கு தரையிறங்கும் அவர், அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்கிறார்.
மதியம் 12.15 மணி அளவில் நிவாரண முகாம்களில் தங்கியுள்ள மக்களை சந்தித்து பேச உள்ளார். நிலச்சரிவில் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோரையும் சந்தித்து ஆறுதல் கூற உள்ளார். தற்போதைய மீட்புப் பணி நிலவரம் குறித்து ராணுவம் மற்றும் மீட்புப் படை அதிகாரிகளிடம் கேட்டறிய உள்ளார்.
பின்னர் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் உயர்நிலைக் கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் வயநாடு பகுதிகளில் மேற்கொள்ளப்பட உள்ள புனரமைப்பு பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட இருக்கிறது.
பிரதமர் மோடியின் வருகை கேரளாவில் மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கி உள்ளது. அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று தெரிகிறது. வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தொடர்ந்து வலியுறுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் நரேந்திர மோடியின் வருகையை ஒட்டி வயநாடு மாவட்டம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. ரயில் நிலையம், பேருந்து நிலையங்களில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது. கல்பேட்டை உள்ளிட்ட முக்கிய நகரங்களின் போக்குவரத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT