Published : 10 Aug 2024 05:32 AM
Last Updated : 10 Aug 2024 05:32 AM
வயநாடு: வயநாட்டில் நேற்று காலை திடீரென நில அதிர்வு ஏற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதியிலிருந்த மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டனர்.
கடந்த மாதம் 30-ம் தேதி கேரள மாநிலம் வயநாட்டில் ஏற்பட்ட பயங்கர நிலச்சரிவால் 3 கிராமங்கள் மண்ணில் புதைந்தன. இந்த பேரழிவில் 400-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துவிட்டனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்த அதிர்ச்சியிலிருந்து அப்பகுதி மக்கள் மீள்வதற்குள் நேற்று வயநாடு பகுதியில் திடீரென நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நில அதிர்வானது வயநாட்டின் அம்பலவாயல், மான்கொம்பு, அம்புகுத்தி மாளிகா, நென்மேனி, பதிபரம்பா, சுதனகிகிரி, சேத்துக்குன், கரட்டப்பிடி, மயிலாடிபாடி, சோழபுரம், தைகும்தரா ஆகிய கிராமங்களில் உணரப்பட்டதாக வயநாடு மாவட்ட ஆட்சியர் மேகஸ்ரீ தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் உள்ள மக்கள் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டதோ என்று பயந்துவிட்டனர். பின்னர் அது வெறும் நிலஅதிர்வுதான் என்பது தெரிந்ததும் நிம்மதிப்பெருமூச்சு விட்டனர்.
இதையடுத்து அப்பகுதியில் வசித்த மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு மாவட்ட நிர்வாக அதிகாரிகள் மாற்றியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT