Last Updated : 30 May, 2018 02:50 PM

 

Published : 30 May 2018 02:50 PM
Last Updated : 30 May 2018 02:50 PM

மாயாவதி விபரீத முடிவை எடுத்துவிட்டார்; நாடாளுமன்றத்தில் ஒழுங்கின்மைகள் அதிகரித்து வருகின்றன: பி.ஜே.குரியன் பேட்டி

மாயாவதி ஒரு விபரீத முடிவை எடுத்துவிட்டார். அவர் அந்த நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கோ அல்லது தொகுதியில் ஏற்பட்ட நெருக்கடிக்காகவோ அவ்வாறு செய்திருக்கலாம் என மாநிலங்களவைத் துணைத்தலைவர் பி.ஜே.குரியன் கூறியிருக்கிறார்.

நாடாளுமன்றத்தில் அழுத்தங்களும், திரிபுகளும் ஒழுங்கின்மைகளும் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

ஜூன் மாத இறுதியில் ஓய்வு பெறுகிறார் ராஜ்யசபா துணைத்தலைவர் பி.ஜே.குரியன்.  ராஜ்யசபா துணைத்தலைவராக தனது பதவிக்காலம் குறித்தும் பட்ஜெட் கூட்டத்தொடர் முழுவதும் எந்த ஒரு முக்கிய அலுவல்களும் நடைபெறாமல் முற்று பெற்றது குறித்தும் அரசாங்கத்துக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே நிலவும் பேச்சுவார்த்தை பற்றாக்குறை குறித்தும், ராஜ்யசபாவின் முக்கியத்துவம் குறித்தும், நாடாளுமன்ற நடவடிக்கைகளில் அவசரமாகத் தேவைப்படும் மாற்றங்கள் குறித்தும் அவர் விரிவாகப் பேசியிருக்கிறார்.

தி இந்து ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் இருந்து..

ராஜ்யசபா பதவிக்காக வேட்புமனு தாக்கல் செய்ய ஜூன் 11 கடைசி நாள். மாநிலங்களவையில் உங்களை மீண்டும் பார்க்க முடியுமா?

மாநிலங்களவையில் நான் மீண்டும் இடம்பெறுவேனா என்பதை காங்கிரஸ் முடிவு செய்யும். கட்சி என்ன முடிவு செய்தாலும் அதை நான் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்.

அரசுத் தரப்பும் சரி, எதிர்க்கட்சியும் சரி இரண்டுமே ராஜ்யசபா துணைத்தலைவரைத் தேர்வு செய்வதில் உத்வேகத்துடன் ஆயத்தமாகி வருகின்றன. துணைத்தலைவர் பதவியை அரசு எதிர்க்கட்சிக்கென அளிக்கவேண்டும் என நினைக்கிறீர்களா?

துணைத் தலைவர் பதவி என்பது நடுநிலையான பதவி. துணைத்தலைவராக இருப்பவர் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி என இரு தரப்புக்கு சரி சமமான வாய்ப்புகளை வழங்க வேண்டும். எதிர்க்கட்சியும் அரசும் அரசியல் ரீதியாக எதிரெதிராக இருந்தாலும்கூட அது சண்டையாக நீடிக்க அவசியம் இல்லை.

2012-ல் நான் ஏகமனதாகத் தேர்வு செய்யப்பட்டேன். அப்போதும்கூட ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கும் தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும் இடையே அரசியல் வேறுபாடுகள் இருந்தன. குடியரசு துணைத் தலைவர் தேர்வு என்பது வேறு. அவர் நாட்டின் துணைத் தலைவர். ஆனால், ராஜ்யசபா துணைத் தலைவர் என்பவர் அவையின் அன்றாடப் பணிகளை மேற்கொள்பவர். எனவே, அரசும் எதிர்க்கட்சியும் பேச்சுவார்த்தை மூலம் சுமுகத் தீர்வை எட்டலாம் என நான் நம்புகிறேன்.

உங்கள் பிரியாவிடை உரையின்போது, "கடந்த காலங்களில் எதிர்ப்பைத் தெரிவிக்க உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்வார்கள்.. இப்போதெல்லாம் எதிர்ப்பைத் தெரிவிக்க அவையின் மையப் பகுதியில் குவிகிறார்கள்" எனக் கூறியிருந்தீர்கள். இது ஜனநாயகத்துக்கு எத்தகைய அழிவை ஏற்படுத்தியிருக்கிறது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

அவையின் நடுவே கூடுவதும் கோஷங்களை எழுப்புவதும் நிச்சயமாக ஜனநாயகத்துக்கு கேடு விளைவிக்கும் செயல்களே. நாடாளுமன்றம் என்பது கூச்சல் போடவும் ஒழுங்கற்ற முறையில் நடந்துகொள்வதற்குமான இடமில்லை. நாடாளுமன்றம் என்பது விவாதங்களுக்கான இடம். முக்கிய முடிவுகள் எடுப்பதற்கான இடம். அதைவிடுத்து கூச்சல் குழப்பம் ஏற்படுத்துவதால் பயனடைவது அமைச்சர்கள் மட்டுமே. அவையில் வைத்து யாரும் அவர்களை தர்மசங்கடமான கேள்விகளைக் கேட்பதில்லை. அவர்களுக்கான பொறுப்பு என்னவென்பதை உணர்த்தும் வகையிலும் கேள்விகளை எழுப்புவதில்லை. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதங்களோ ஆலோசனைகளோ இடம்பெறவில்லை. எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடந்த பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனநாயகத்தின் மாண்பைக் குறைத்துள்ளது.

இப்பிரச்சினையில் யாரை நீங்கள் குறை சொல்வீர்கள்?

இந்தப் பழியைப் பங்குவைக்க விரும்பவில்லை. எல்லோருக்குமே பொறுப்பு இருக்கிறது என்றுதான் கூறுவேன். அரசாங்கம், எதிர்க்கட்சி என இரு தரப்பின் கூட்டுத்தோல்வியே இது. எதிர்க்கட்சியினர் தங்களது சில கோரிக்கைகளுக்கும் குறைபாடுகளுக்கும் அரசு செவி சாய்க்கவில்லை எனக் கூறுகின்றன. ஆனால், அரசோ தேசிய நலன் சார்ந்த சில முக்கியச் சட்டங்களை இயற்றமுடியாமல் போனதற்கு எதிர்க்கட்சிகளின் அமளியே காரணம் என்கிறது. இந்தப் போட்டிக்கு இடையே அவைத்தலைவராகிய எனது குரல் காது கேட்கும் திறனற்றவர்களின் காதுகளில் விழும் ஓசையைப் போல் வீணாகிப்போனது. இதுதான் உண்மை நிலவரம். இனியும் நாடாளுமன்றம் முடங்காமல் இருக்க வேண்டும் என்றால் எல்லோரும் ஒன்றிணைந்து ஒரு தீர்வு காண வேண்டும்.

நடந்து முடிந்த பட்ஜெட் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் அரசாங்கம் இடையே சரியான முறையில் முன் ஆலோசனை நடைபெறவில்லை என நினைக்கிறீர்களா?

ஒரு ஜனநாயக அரசின் நடவடிக்கைகள் எப்படி இருக்கும் தெரியுமா? அரசாங்கத்துக்கு எதிர்க்கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் அரசின் நடவடிக்கைகள் அமையும். ஜனநாயகத்தைப் பேண எதிர்க்கட்சி இன்றியமையாதது. எதிர்க்கட்சியின் குரலை நெறிக்க நினைப்பது நாட்டை வதைக்கும் செயல். நாடாளுமன்றத்துக்கு வெளியேயும் அரசாங்கமும் எதிர்க்கட்சியும் பேசிக்கொள்ள வேண்டும். இருதரப்பும் ஒன்றை மற்றொன்று தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். ஒரு விஷயத்தில் இருவருக்கும் உடன்பாடில்லை என்ற நிலையை ஏற்றுக்கொள்ள பழக வேண்டும். சில விஷயங்களில் எதிர்க்கட்சிகளுக்கு உடன்பாடு இல்லாமல் போகலாம் அதற்காக அரசை செயல்படவிடாமல் முடக்கக் கூடாது.

நாடாளுமன்றத்தில் நான் என் இளமைப் பருவத்தில் பணியாற்றியபோது இத்தகைய அனுபவங்கள்தான் எனக்கு வாய்த்தன. அதற்கு அடித்தளமாக அமைந்தது அரசுக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையேயான பேச்சுவார்த்தைகள். அப்படிப்பட்ட பேச்சுவார்த்தைகள் இப்போது நடைபெறுகிறதா என எனக்குத் தெரியவில்லை. நாடாளுமன்ற விவாகரத்துறை அமைச்சரும் ஆளுங்கட்சியின் மூத்த தலைவர்களுமே இத்தகைய பேச்சுவார்த்தைகள் நடைபெறுவதை உறுதி செய்ய வேண்டும்.

அரசாங்கமும் எதிர்க்கட்சியின் கருத்துகளைப் பரிசீலிக்க வேண்டும், கோரிக்கைகளுக்கு செவி சாய்க்க வேண்டும். முடிந்தவரையில் இணக்கமான போக்கைக் கடைபிடிக்க வேண்டும். அப்படி ஒன்று நடப்பதாகவே தெரியவில்லை.

ஆக, எதிர்க்கட்சிகளோ இந்த அரசாங்கம் எங்களின் உணர்வுகளுக்கு துளியும் மதிப்புக் கொடுப்பதில்லை எனக் கூறுகிறது. அரசாங்கமோ எதிர்க்கட்சி எதிரிக்கட்சியாக செயல்படுகிறது என்கிறது. இந்த இருவேறு போக்குகளுக்கும் இடையே நாடாளுமன்றம் முடங்கிப் போகிறது. இருதரப்புமே முடக்கத்துக்குக் காரணமாக இருக்கின்றன.

காங்கிரஸ் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட அழைப்பு விடுத்திருக்கிறாரே. இதில் உங்கள் கருத்து என்ன?

இது ஒரு நல்ல யோசனை. மக்களுக்கு நாடாளுமன்ற அமைப்பின் மீதான நம்பிக்கை குறைந்துவிட்டது. அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க வேண்டிய பொறுப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் நாடாளுமன்றத்துக்கும் இருக்கிறது. எனவே, அவசரமாக ஒரு இடைக்காலக் கூட்டத்தொடர் நடத்துவதே ஒரு தீர்வாக அமையும். அந்தக் கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் என்ன பேச விரும்புகிறதோ அதை விவாதிப்பதுடன் அரசு நிறைவேற்ற விரும்பும் சட்ட மசோதாக்களையும் நிறைவேற்ற வேண்டும். ஆனால், இத்தகைய கூட்டத்தொடர் நடைபெற வாய்ப்பிருக்கிறதா என்பதே கேள்விக்குறிதான்.

 பட்ஜெட் கூட்டத்தொடரில் என்ன நடந்தது என்பது நினைவிருக்கிறதா? எதிர்க்கட்சிகள் வங்கி ஊழல்கள் குறித்து ஒரு குறிப்பிட்ட வாக்கெடுப்பு முறை மூலம் விவாதிக்க விரும்பியது. ஆனால், அரசு அதனை ஏற்கவில்லை. என்னால் ஏதும் செய்யமுடியாமல் போனது. இரண்டு, மூன்று நாட்களாக அமளி நீடித்தது. அப்போது, எதிர்க்கட்சி ஒருபடி கீழே இறங்கிவந்து வாக்கெடுப்பு மூலம் விவாதம் நடத்தாவிட்டாலும் பரவாயில்லை. விவாதம் மட்டுமாவது நடத்துவோம் என்றது. அப்போது நான் எல்லாம் சுமுகமாக முடிந்து விவாதம் தொடங்கும் என எதிர்பார்த்தேன். ஆனால், ஆந்திரா, தமிழகக் கட்சிகள் தத்தம் பிரச்சினைகளுக்காக எதிர்ப்புக்குரல் எழுப்பின. 20, 25 உறுப்பினர்கள் எனது இருக்கையைச் சுற்றி நின்றுகொண்டு கோஷம் எழுப்பினர். அப்படியென்றால் எப்படி அவையில் விவாதம் நடைபெறும்.

நாடாளுமன்ற விதிமுறைகளில் அவசரகால திருத்தம் ஏதும் தேவை என நீங்கள் நினைக்கிறீர்களா?

ஆம், விதிமுறைகளில் திருத்தம் கொண்டுவர வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். தற்போதைய விதிகளின்படி ஏதாவது ஓர் உறுப்பினர் அவையின் மையப் பகுதிக்கு வந்தால் அவரை வெளியேற்ற ஒரு நடவடிக்கை மசோதா கொண்டுவர வேண்டும். ஆனால், அதில் துணைத்தலைவருக்கு எந்த சுதந்திரமும் இல்லை. அதனால் அது நிறைவேறாது. முதலில் அந்த நடவடிக்கையை வாக்கெடுப்புக்கு உள்ளாக்குவதற்குக்கூட அவையில் அமைதி நிலவ வேண்டும்.

எனவே, இதுபோன்ற விதிமுறையில் மாற்றம் கொண்டுவர வேண்டும். அமளியில் ஈடுபடும் உறுப்பினரை இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு சேர்மனே இடைநீக்கம் செய்யும் வகையில் திருத்தம் வர வேண்டும். அப்படி ஒரு திருத்தம் வந்தால் அவை சுமுகமாக இயங்க இயலும்.

நீங்கள் தொடர்ந்து 6 முறை மக்களவை உறுப்பினராக இருந்துள்ளீர்கள். அவையில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவர எதிர்க்கட்சியானது 13 முறை முயன்றும் முடியாமல் போனது குறித்து என்ன நினைக்கிறீர்கள்?

எனக்கு அவ்விவகாரத்தில் ஒரு நிலைப்பாடு இருக்கிறது. ஆனால், அவையின் சபாநாயகர் சுமித்ரா மஹாஜனின் நடவடிக்கைகளை நான் எப்படி விமர்சிக்க முடியும்? அப்படி நான் விமர்சிக்க விரும்பவில்லை. நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸ் வழங்கப்பட்டு அதை 50 உறுப்பினர்கள் ஆதரித்துவிட்டார்கள் என்றால் அந்த நோட்டீஸ் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவே அர்த்தம். ஆனால், மக்களவையில் நடந்தது என்ன? சபாநாயகர் ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தார்? என்பது தெரியவில்லை. அதை நான் விமர்சிக்க முடியாது. அது அவரது தனிப்பட்ட முடிவு.

மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்ட உறுப்பினர்களை மக்களவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை மறைமுகமாக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட மாநிலங்களவை முட்டுக்கட்டை போடக்கூடாது என சில அமைச்சர்கள் கூறுகின்றனர். இது குறித்து உங்கள் கருத்து என்ன?

மாநிலங்களவை மக்களவைக்கு கீழானது என்ற கருத்தை நான் ஏற்பதாக இல்லை. அரசியல் சாசனத்தை நீங்கள் படித்தால் மாநிலங்களவைதான் முதலில் பட்டியலிடப்பட்டிருக்கும். அரசியல் சாசனமானது இந்தியா 'மக்களின் குடியாட்சி' என்று கூறவில்லை. அது 'மாநிலங்களின் கூட்டமைப்பு' என்றே கூறுகிறது. எனவே அரசியல் சாசனம் கூட்டாட்சியை தெளிவாக விளக்கியுள்ளது. மாநிலங்களவைக்கும் சரிசமமான முக்கியத்துவம் இருக்கிறது. மக்களவை உறுப்பினர்கள் தாங்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட தொகுதிக்கு நல்லது செய்கிறேன் என்ற பெயரில் தேசத்துக்கு அநீதி இழைக்க வாய்ப்பிருக்கிறது. எனவே, மாநிலங்களவையானது மக்களவை நடவடிக்கைகளைக் கண்காணித்து சீர்தூக்கவே உருவாக்கப்பட்டது. தேசிய நலனை யாரால் பாகுபாடின்றி நியாயமாகப் பார்க்க முடியும் என நினைக்கிறீர்கள்? தனிப்பட்ட விருப்பங்களில் இருந்து விலகி நிற்பவர்களாலேயே அதைச் சரியாகச் செய்ய முடியும். அதைத்தான் மாநிலங்களவை செய்கிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம், பகுஜன் சமாஜன் கட்சியின் தலைவர் மாயாவதி தனக்கு அவையில் பேச போதிய நேரம் ஒதுக்கப்படவில்லை எனக் கூறி பதவியை ராஜினாமா செய்தார். அந்த சம்பவத்தை நீங்கள் இன்னும் சிறப்பாகக் கையாண்டிருக்கலாமோ?

மாயாவதி ராஜினாமா செய்ததற்காக வருந்துகிறேன். அன்றைய இரவு என்னால் நிம்மதியாகத் தூங்க முடியவில்லை. அவர் ஒரு மூத்த தலைவர். அவர் மீது எனக்கு பெரும் மதிப்பு உண்டு. அவர் எப்போதெல்லாம் அவையில் பேச அனுமதி கேட்டாரோ அப்போதெல்லாம் அனுமதி அளித்திருக்கிறேன். நிறைய தருணங்களில் கூடுதல் நேரம் வழங்கியிருக்கிறேன். ஆனால், அவர் ஒரு விபரீத முடிவை எடுத்துவிட்டார். அவர் அந்த நேரத்தில் ஏற்பட்ட நெருக்கடிக்கோ அல்லது தொகுதியில் ஏற்பட்ட நெருக்கடிக்காகவோ அவ்வாறு செய்திருக்கலாம்.

நாடாளுமன்ற நடவடிக்கைகள் நேரலையில் ஒளிபரப்படும் காலகட்டத்தில் தேவையற்ற வார்த்தைகளைத் திரும்பப் பெறும் நடவடிக்கையால் என்ன பயன் என நினைக்கிறீர்கள்?

அதற்கு எந்த அர்த்தமும் இல்லை. நேரலையில் ஒளிபரப்பப்படும்போது ஒட்டுமொத்த உலகமே அதைப் பார்த்துவிடுகிறது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும். நேரலையில் ஒளிபரப்புவதற்குப் பதிலாக சற்று கால இடைவெளிவிட்டு ஒளிபரப்பலாம். நாடாளுமன்ற உறுப்பினர்களும் மனிதர்கள்தானே. எனவே, சில நேரம் அவர்களும் தவறான வார்த்தைகளைப் பயன்படுத்த வாய்ப்புள்ளது. அத்தகைய வார்த்தைகள் நேரலையில் மக்களைச் சென்றடையக்கூடாது. இதற்கு சம்பந்தப்பட்டவர்கள்தான் தீர்வு காண வேண்டும்.

ஒரு துணைத் தலைவராக, ஐமுகூட்டணி தேஜ கூட்டணி இவற்றில் எந்த காலகட்டத்தில் பணியற்றியது சவால் நிறைந்தது என நீங்கள் நினைக்கிறீர்கள்?

இரண்டு ஆட்சிகளின்போதுமே கடினமான காலகட்டங்கள் இருந்தன. ஆனால், அண்மைக்காலமாக அந்த சவால் மிக மிகக் கடினமானதாக மாறிவிட்டது. கடந்த கூட்டத்தொடர் முழுவதும் துடைக்கப்பட்டது. இதுபோன்ற நிலை இதற்கு முன் ஏற்பட்டதில்லை. முன்பெல்லாம், இரண்டு மூன்று நாட்கள் அமளி நடக்கும் பின்னர் நாடாளுமன்றம் மீண்டும் இயங்கும். ஆனால், ஒவ்வோர் ஆண்டும் இந்த நிலை தாழ்ந்துகொண்டே வருவதாகத் தோன்றுகிறது. இதுபோன்ற அழுத்தங்களும், திரிபுகளும் ஒழுங்கின்மைகளும் நாடாளுமன்றத்தில் அதிகரித்து வருகின்றன. இது வேதனையளிக்கிறது.

தமிழில்: பாரதி ஆனந்த்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x