கோயில், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கியது பிஹார் அரசு

கோயில், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை பதிவு செய்வதை கட்டாயமாக்கியது பிஹார் அரசு
Updated on
1 min read

பாட்னா: பதிவு செய்யப்படாத கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் அனைத்தும் பதிவு செய்வதை உறுதிப்படுத்தும்படியும், அவற்றின் அசையா சொத்துகளின் விவரங்களை மாநில அரசின் அறநிலையத்துறை மற்றும் அறக்கட்டளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யவும் அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், பிஹார் அரசு உத்தரவிட்டுள்ளது.

பிஹார் அரசின் அறநிலையத்துறை மற்றும் அறக்கட்டளை வாரியம் மாநில சட்டத்துறையின் கீழ் செயல்படுகிறது. இதில் அனைத்து கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இது குறித்து மாநில சட்ட அமைச்சர் நிதின் நிமின் நேற்று அளித்த பேட்டியில் கூறியதாவது:

பிஹாரில் உள்ள பதிவு செய்யப்படாத கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளை முன்னுரிமை அடிப்படையில் பதிவுசெய்வதை மாவட்ட ஆட்சியர்கள்உறுதி செய்ய வேண்டும். பதிவுசெய்யப்பட்ட கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகளின் அனைத்து அசையா சொத்துகளும் மாநில அரசின் அறநிலையத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படுவதையும் உறுதி செய்ய வேண்டும். இது தொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் சமீபத்தில் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால் இதுவரை 18 மாவட்டங்கள் மட்டும் இணைய தளத்தில் தகவல்களை பதிவேற்றம் செய்துள்ளன. பிஹார் இந்து மத அறக்கட்டளை சட்டம் 1950-ன்படி படி அனைத்து கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகள், தர்மசாலாக்கள் அறநிலையத்துறையுடன் பதிவு செய்யப்பட வேண்டும்.

பதிவுசெய்யப்பட்ட கோயில்கள், மடங்கள் மற்றும் அறக்கட்டளைகள் சட்டவிரோத சொத்து பரிமாற்றத்தில் ஈடுபட்டால், அவர்கள் மீது மாநில அரசு கடும் நடவடிக்கை எடுக்கும். கோயில்களின் சொத்துகளை பாதுகாக்க பதிவு செய்யப்படுவது முக்கியம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

மாநில அறநிலையத்துறையின் சமீபத்திய தகவல்படி, சுமார் 2,512 பதிவு செய்யப்படாத கோயில்கள் மற்றும் மடங்கள் உள்ளன. இவற்றுக்கு சொந்தமாக 4,321.64 ஏக்கர் நிலங்கள் உள்ளன. மாநிலத்தில் 2,499 கோயில்கள் மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுக்கு சொந்தமாக 18,456 ஏக்கர் நிலங்கள் உள்ளன.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in