Published : 09 Aug 2024 05:46 AM
Last Updated : 09 Aug 2024 05:46 AM
கொல்கத்தா: மேற்கு வங்க முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) உடல்நலக்குறைவு காரணமாக நேற்று காலமானார். மார்க்சிஸ்ட் அலுவலகத்தில் இன்று பொதுமக்கள் அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புத்ததேவ் பட்டாச்சார்யா (80) கடந்த 2000-வது ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை மேற்கு வங்க முதல்வராக பதவி வகித்தார். சுமார் 50 ஆண்டுகள் அரசியல் அனுபவம் வாய்ந்தஅவர், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்ததலைவர்களில் ஒருவராக விளங்கினார். வயது மூப்பு காரணமாக கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவர் கொல்கத்தாவில் உள்ள தனது வீட்டில் நேற்று காலையில் காலமானார்.
இதையடுத்து, மாநில ஆளுநர் சி.வி.ஆனந்த போஸ், முதல்வர் மம்தா பானர்ஜி, இடதுசாரி முன்னணி தலைவர் பிமன் போஸ், மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் முகமது சலீம் மற்றும் கட்சியின் மூத்ததலைவர்கள் உள்ளிட்டோர் பட்டாச்சார்யா உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முகமது சலீம் செய்தியாளர்களிடம் நேற்று கூறும்போது, “புத்ததேவ் பட்டாச்சார்யா உடல்நலக்குறைவால் காலமானார். அவரது உடல் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட உள்ளது. பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக, அவரது உடல் வெள்ளிக்கிழமை கட்சியின் தலைமையகத்துக்கு கொண்டு செல்லப்படும்.
மருத்துவ ஆராய்ச்சிக்காக தனது உடலை வழங்க வேண்டும் என்பது அவருடைய விருப்பம். இதன்படி, பொதுமக்கள் அஞ்சலிக்குப் பிறகு அவரது உடல் மாநில அரசின் என்ஆர்எஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்படும்” என்றார்.
ஆளுநர், முதல்வர் இரங்கல்: மேற்கு வங்க முதல்வர் மம்தா செய்தியாளர்களிடம் கூறும்போது, “புத்ததேவ் பட்டாச்சார்யா ஆற்றிய பணிகளுக்காக மக்களின் மனதில் என்றென்றும் நிலைத்து இருப்பார். அவருடைய மனைவி மற்றும் குடும்பத்தினருக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். அவருடைய இறுதிப் பயணத்தின்போது மாநில அரசு சார்பில் முழு மரியாதை செலுத்தப்படும்” என்றார்.
ஆளுநர் மாளிகை நேற்று வெளியிட்ட அறிக்கையில், “முன்னாள் முதல்வர் புத்ததேவ் பட்டாச்சார்யா மறைவுக்கு ஆளுநர் ஆனந்த போஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். எளிமையான வாழ்க்கை, உயர்ந்த சிந்தனையுடன் வாழ்ந்த அவர் மீது மாநில மக்களுக்கு மிகுந்த மரியாதை உள்ளது. அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு மன வலிமையை தர வேண்டும் எனபிரார்த்தனை செய்வதாக ஆளுநர் தெரிவித்துள்ளார்” என கூறப்பட்டுள்ளது.
ஜோதி பாசு தலைமையிலான அரசுடன் ஒப்பிடும்போது புத்ததேவ் அரசு தொழில் துறையினருக்கு ஆதரவான கொள்கைகளை கொண்டுவந்தது. குறிப்பாக தொழிற்சாலைகளை தொடங்க சிங்கூரில் நிலம் ஒதுக்கியது. இதை எதிர்த்து மம்தா பெரிய அளவில் போராட்டம் நடத்தினார். இதனால் 34 ஆண்டு கால கம்யூனிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT