Last Updated : 11 May, 2018 07:45 PM

 

Published : 11 May 2018 07:45 PM
Last Updated : 11 May 2018 07:45 PM

ரயில்நிலைய ‘வை-பை’ சேவையில் படித்து சிவில் சர்வீஸ் தேர்ச்சி பெற்ற ‘கேரள போர்ட்டர்’

கேரள மாநிலம், எர்ணாகுளம் ரயில்நிலையத்தில் உள்ள இலவச வைபை இன்டர்நெட் சேவையைப் பயன்படுத்தி படித்து, கேரள மாநில சிவில் சர்வீஸ் தேர்வில் சுமை தூக்கும் தொழிலாளி தேர்ச்சி பெற்றுள்ளார்.

மாநில அரசுப்பணி அல்லது மத்திய சிவில் சர்வீஸ் தேர்வுக்கு தயாராகுபவர்கள் எப்போதும் தங்களைச் சுற்றி புத்தகங்களை வைத்துக்கொண்டு படித்துவருவதைத்தான் பார்த்திருப்போம். ஆனால், கேரள மாநிலம், எர்ணாகுளம் ரயில் நிலையத்தில் சுமை தூக்கும் தொழிலாளி கே.ஸ்ரீசாந்த் எந்தவிதமான புத்தகங்களும் இல்லாமல் படித்து, கேரள மாநில அரசுத் தேர்வில் தேர்வாகியுள்ளார்.

ரயில்நிலையத்தில் கிடைக்கும் இலவச வைபை இணையதள சேவையை பயன்படுத்தி, தனது செல்போன், ஹெட்போன் மூலம் தேவையான பாடங்களை ஸ்ரீசாந்த் படித்துள்ளார்.

இது குறித்து சுமை தூக்கும் தொழிலாளி ஸ்ரீசாந்த் கூறியதாவது:

எனது சொந்த ஊர் முணாறு. பள்ளிப்படிப்பை முடித்தபின், எர்ணாகுளத்தில் உள்ள ரயில்நிலையத்தில் சுமைதூக்கும் தொழிலாளியாக வேலைக்குச் சேர்ந்தேன். ஏறக்குறைய 5 ஆண்டுகளாக இங்குதான் சுமைதூக்கும் பணியைச் செய்து வருகிறேன்.

எனக்கும் அரசுத்தேர்வு எழுதி அரசுப்பணிக்குச் செல்ல ஆசையாக இருந்தது. ஆனால், பகல்நேரத்தில் படிப்பதற்து நேரம் இருக்காது. அப்போது என்ன செய்யலாம் என நினைத்திருந்தபோது, கடந்த 2016-ம் ஆண்டு பிரதமர் மோடியின் வருகையின் போது எர்ணாகுளம் ரயில்நிலையத்தில் இலவச வைபை சேவை தொடங்கப்பட்டது. இதை நான் ஆக்கப்பூர்வமாக எனது தேர்வுகளுக்கு தயாராகப் பயன்படுத்திக்கொண்டேன்.

என்னுடைய செல்போன் மூலம் பாடங்களை பதிவிறக்கம் செய்து பாடங்களைபடிப்பேன், சில நேரங்களில் ஒலிவடிப பாடங்களைக் கேட்பேன். எனக்கு ஏதாவது சந்தேகங்கள் இருந்தால், ஆசிரியர்களிடம் செல்போன் மூலமே கேட்டு தெரிந்து கொள்வேன்.

இதற்கு முன் இருமுறை தேர்வு எழுதியும் நான் தேர்வாகவில்லை. ஆனால், வைபை இணைப்பு கிடைத்தபின் அதைப் பயன்படுத்தி படித்துத் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று இருக்கிறேன். பயணிகளின் சுமைகளை தூக்கும் போதும், இறக்கும் போதும் நான் பாடங்களை இயர்போன் மூலம் கேட்டுக்கொண்டே இருப்பேன். இரவுநேரங்களில் படித்த பாடங்கள் அனைத்தையும் மீண்டும் நினைவபடுத்துவேன்.

இப்போது அரசுப்பணிக்கான எழுத்துத்தேர்வில் தேர்வாகிவிட்டேன். இனி நேர்முகத் தேர்வு மட்டும் இருக்கிறது. அது முடிந்தபின், வருவாய்துறையில் களஉதவியாளராக பணி கிடைக்கும். இருந்தாலும், எனக்கு வேலைகிடைக்கும் வரை தொடர்ந்து இந்த வைபை உதவியுடன் அடுத்த கட்ட தேர்வுக்காகப் பாடங்களை படித்து வருகிறேன்.

எனது குடும்ப வறுமையால் பள்ளிப்படிப்புக்கு மேல் படிக்க இயலவில்லை. அரசுத்தேர்வுக்கும் தயாராக முடியாது என வேதனை அடைந்தேன். ஆனால், இப்போது அந்தக் குறை எல்லாம் களையப்பட்டுவிட்டது.அடுத்தடுத்து தேர்வுகளுக்கு படித்து இன்னும் உயர்ந்தபதவிக்கு செல்வதுதான் எனது விருப்பமாகும். எனது குடும்பத்தை ஏழ்மை நிலையில் இருந்துமீட்பேன்.

இவ்வாறு ஸ்ரீசாந்த் தெரிவித்தார்.

ரயில்நிலையங்களில் வைபை இணையதள வசதியை செய்து கொடுக்கும் மத்திய அரசின் திட்டத்தில் இதுவரை 685 ரயில்நிலையங்களில் வைபை வசதி செய்யப்பட்டுள்ளது. 2019ம் ஆண்டு மார்ச் மாதத்துக்குள் 8,500 ரயில்நிலையங்களில் வைபை வசதி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ரூ.700 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க, மிஸ் பண்ணிடாதீங்க...

 

நம்பினால் நம்புங்கள்.. ‘பேப்பர் பாத்திரத்தில்’ டீ போடும் மனிதர்

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x