

இந்தியாவில் எபோலா வைரஸ் தாக்கம் இல்லை. அதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடான லைபீரியாவில் பல உயிர்களை எபோலா வைரஸ் பறித்துள்ளதன் காரணமாகவும், மருந்து சிகிச்சைக்கு கட்டுப்படாமல் நோய் வேகமாக பரவி வருவதாலும், சர்வதேச சுகாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் பிரகடனம் செய்துள்ளது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறியுள்ளதாவது: "தற்போது வரை இந்தியாவில் எபோலா வைரஸ் அச்சுறுத்தல் இல்லை. மக்கள் பீதியடைய வேண்டாம். அரசாங்கம் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எபோலா வைரஸ் தாக்கம் ஏற்பட்டுள்ள நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகளையும் தீவிரமாக கண்காணித்து வருகிறோம்" என தெரிவித்துள்ளார்.
மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் எபோலா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, மத்திய அரசு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்புக்கு உத்தரவிட்டுள்ளது. மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில் இருந்து வரும் பயணிகளை சோதனைக்கு உட்படுத்துமாறு கூறியுள்ளது. தேவையில்லாமல் நோய் தொற்றுள்ள நாடுகளுக்கு பயணம் செய்வதையும் தவிர்க்குமாறு கூறியுள்ளது.
நோய் தொற்று ஏற்பட்டுள்ள லைபீரியா உள்ளிட்ட ஆப்பிரிக்க நாடுகளில் 45,000 இந்தியர்கள் வசித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.