Published : 08 May 2018 07:58 PM
Last Updated : 08 May 2018 07:58 PM

பாஜக தன்னை தேசத்துக்கு அர்ப்பணிக்கிறது; காங்கிரஸ் ஒரு குடும்பத்தை வழிபடுகிறது: பிரதமர் மோடி விமர்சனம்

கர்நாடகாவில் தேர்தல் காய்ச்சல் உச்ச நிலையை எட்டிக் கொண்டிருக்கிறது, அதிகாரத்துக்கான வேட்கையில் காங்கிரசும், பாஜகவும் ஒருவர் மீது ஒருவர் கடுமையான விமர்சனங்களை ஏவி விட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இருதரப்பினருமே யார் உத்தமர் என்பதில் போட்டாப்போட்டியாக பேசி விளம்பரம் தேடி வருகின்றனர். கர்நாடகாவில் காங்கிரஸ் தூக்கி எறியப்படும், தோல்விக்கான காரணங்களைத் தேடிக் கொண்டிருக்கின்றனர் என்று பிரதமர் மோடி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் கூறினார்.

விஜயபுராவில் மோடி பேசும்போது, “கர்நாடக மக்கள் காங்கிரஸை தூக்கி எறிய முடிவுகட்டிவிட்டனர், அதன் தவறான ஆட்சிக்கு தண்டனை கொடுக்க முடிவெடுத்து விட்டனர். காங்கிரஸ் தோல்விக்கான காரணத்தை இப்போதே தேட ஆரம்பித்து விட்டனர், ஈவிஎம் குறைபாடுகளைக் கூறுவார்கள்.

நடப்பு கர்நாடக காங்கிரஸ் ஆட்சியில் ஒரு அமைச்சர் கூட நிதி முறைகேடுக் குற்றச்சாட்டை எதிர்கொள்ளாதவர்களே இல்லை.

ஆளும் காங்கிரச் கட்சி சமூகத்தைப் பிளவு படுத்தி ‘சாதி எனும் விஷத்தை’ பரப்புகின்றனர். ஏ/சி அறையில் அமர்ந்து கொண்டு தொங்கு சட்டசபை ஏற்படும் என்று கணிப்புகளை சிலர் அள்ளிவிடுகின்றனர். காங்கிரஸ் பிரித்தாளும் சூழ்ச்சியை கடைபிடிக்கிறது.

சாதி மத ரீதியாக பிளவுபடுத்தி சகோதரர்களுக்கு இடையே சண்டை மூட்டி விடுகிறது காங்கிரஸ். ஆனல் பசவேஷ்வரா மண்ணின் மைந்தர்கள் அது நிகழ அனுமதிக்க மாட்டார்கள்.

காங்கிரஸ் கட்சி மக்களிடம் என்ன சொல்வது என்று சிந்திப்பதையே மறந்து விட்டது. வீட்டிலும் அலுவலகங்களிலும் அமர்ந்து கொண்டு தோல்விக்கு என்ன காரணம் சொல்லலாம் என்று இப்போதே யோசிக்கத் தொடங்கி விட்டனர்.

கர்நாடக மக்கள் காங்கிரஸ் கட்சியை அதிகாரத்திலிருந்து அகற்ற முடிவெடுத்ததோடு, 5 ஆண்டுகள் அவர்களை தண்டிக்கவும் தயாராகி விட்டனர்.

ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லாத ஒரு காங்கிரஸ் அமைச்சரையாவது பெயர் குறிப்பிட முடியுமா?

விஜயபுராவில் அனைவருக்கும் இவரைப்பற்றி தெரியும் (நீராதார அமைச்சர் எம்.பி.பாட்டீல் பெயரைக் குறிப்பிடாமல்), ஒப்பந்தங்கள் எப்படி வழங்கப்படுகின்றன என்பதும், ஒப்பந்ததாரர்களுடன் இவருக்கான உறவுகளும் கத்தைக் கத்தையாக நோட்டுகள் ஒப்பந்ததாரர்களின் அலமாரிகளிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டதும் அனைவரும் அறிந்த ஒன்று.

காங்கிரஸ் தலைவர்களே கூட மகன் (ராகுல்) தங்கள் வெற்றிக்கு உதவமாட்டார் என்று உணரத் தொடங்கியுள்ளார். நான் காங்கிரஸ் தலைவர் நேர்காணலைப் பார்த்தேன், ஆகவேதான் தாயாரை அனுப்பி குறைந்தபட்சம் தங்கள் டெபாசிட்களையாவது காப்பாற்றிக் கொள்ள முடிவெடுத்துள்ளார்கள்.

பரம்பரை ஆட்சியில் நாட்டையே சீரழித்த காங்கிரஸ், பரம்பரை புகழ் பேசியே தங்களையே அழித்துக் கொள்கின்றனர். பாஜக நாட்டுக்காக தங்களை அர்ப்பணிக்கிறது, ஆனால் காங்கிரஸ் ஆட்சியோ ஒரு குடும்பத்தை வழிபடுகிறது.

காங்கிரஸ் வாக்குவங்கி அரசியலில் மூழ்கிக் கிடக்கிறது, பெண்கள் பாதுகாப்பு பற்றி பேச்சுக்கள் பேசுகின்றனர், ஆனால் முத்தலாக் விவகாரம்... முஸ்லிம் பெண்களைப் பாதுகாக்க நாங்கள்தான் சட்டமியற்றினோம். அவர்கள் அதை எதிர்த்தனர், அது ஒப்புதல் பெறாமல் இருப்பதற்காக ஆர்பாட்டம் நடத்தினர்.

மக்களை பிரித்தாள்கிறதி காங்கிரஸ், ஒருவருக்கொருவர் சண்டையை மூட்டி விடுகின்றனர், இதுதான் அவர்களது கேம்.

இது பசவேஷ்வராவின் மண் என்பது காங்கிரஸாருக்குத் தெரியாது, இந்த மண் சாதி ரீதியாக பிளவு படுத்த முடியாதது.

காங்கிரஸை அகற்றி, சாதிவாதம் என்கிற விஷத்தைப் பரவ மக்கள் அனுமதிக்க மாட்டார்கள்.”

இவ்வாறு பேசினார் பிரதமர் மோடி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x