

புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு ஆட்சியில் ஜம்மு காஷ்மீரில் தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் 69% குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.
ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், மத்திய உள் துறைஅமைச்சக வட்டாரம் காஷ்மீர் பாதுகாப்பு நிலரவம் தொடர்பான புள்ளி விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டு கால ஆட்சியின்போது (2004-2014) காஷ்மீரில் 7,217 தீவிரவாத தாக்குதல் சம்பவங்கள் நடைபெற்றன. பிரதமர் மோடி தலைமையிலான 10 ஆண்டு பாஜக ஆட்சியில் இது 69% குறைந்து 2,263 ஆகி உள்ளது. இதே காலத்தில் தீவிரவாத சம்பவத்தில் ஒட்டுமொத்தமாக உயிரிழந்தோர் எண்ணிக்கை 67% குறைந்துள்ளது. முந்தைய ஆட்சியின்போது 1,769பொதுமக்கள் உயிரிழந்த நிலையில், இப்போதைய ஆட்சியில் இது 353 ஆக குறைந்துள்ளது. முந்தைய ஆட்சியில் 1,060 பாதுகாப்புப் படையினர் கொல்லப்பட்ட நிலையில் பாஜக ஆட்சியில் 591 ஆக குறைந்துள்ளது.
அரசியல் சாசனத்தின் 370-வதுசட்டப்பிரிவு ரத்து செய்யப்படுவதற்கு முந்தைய ஆண்டில் (2018) 1,328 ஆக இருந்த கல்லெறியும் சம்பவங்கள் 2023-ல் 0 ஆகி உள்ளது. இதே காலத்தில் பாகிஸ்தான் எல்லையில் போர் நிறுத்த ஒப்பந்தங்களை மீறும் செயல் 390-லிருந்து9 ஆக குறைந்துள்ளது.
கடந்த 2018-ல் 228 ஆக இருந்ததீவிரவாத தாக்குதல் சம்பவம், 2023-ல் 46 ஆக குறைந்துள்ளது. இதே காலத்தில் 91 ஆக இருந்த பாதுகாப்புப் படையினர் உயிரிழப்பு 30 ஆக குறைந்துள்ளது. பொதுமக்கள் உயிரிழப்பு 55-லிருந்து 14 ஆக குறைந்துள்ளது.
தீவிரவாதத்தை ஒழிக்க பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, தீவிரவாதிகளுடன் தொடர்புடைய சொத்துகளை பறிமுதல் செய்தல், சட்டவிரோத செயல் தடுப்பு சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட வழக்குகளை விரைந்து முடித்தல், தீவிரவாதிகளுடன் தொடர்புடைய அரசு ஊழியர்களை பணிநீக்கம் செய்தல் மற்றும் பாஸ்போர்ட் உள்ளிட்ட அரசு சலுகைகளை ரத்து செய்தல் உள்ளிட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
மேலும் பாதுகாப்பை பலப்படுத்துதல், தீவிரவாதிகளின் முயற்சிகளை முன்கூட்டியே கண்டறிந்து முறியடித்தல், தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதை தடுத்தல்,உள்ளிட்ட நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் தீவிரவாத செயல்கள் குறைந்து வருகின்றன. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.