

புதுடெல்லி: இந்தியாவில் 2014-ல் தொடங்கி கடந்த 10 ஆண்டுகளில் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்தபோது 453 மரணங்கள் நிகழ்ந்திருப்பதாக மத்திய சமூகநீதித் துறை அமைச்சகம் நேற்று தெரிவித்தது.
நமது நாட்டில் மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடிய முறையை ஒழிப்பதற்கான நடவடிக்கை நடைமுறைக்குகொண்டுவரும் சட்டம் இயற்றப்பட்டு 10 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. மனித மாண்புக்கு இழுக்கு ஏற்படுத்தும், மனித வாழ்க்கைக்கு ஆபத்து விளைவிக்கக்கூடிய இந்த தொழிலை செய்யும்படி எவரொருவர் பணித்தாலும் அவருக்கு 2 ஆண்டுகள்வரை கடுங்காவல் தண்டனை அல்லது ரூ.1 லட்சம் வரை அபராதம் அல்லது இரண்டையும் விதிக்கும்படி சட்டம் சொல்கிறது.
இது தொடர்பாக மக்களவையில் நேற்று கேட்கப்பட்ட கேள்விக்கு சமூகநீதித்துறை அமைச்சர்ராம்தாஸ் அத்வாலே எழுத்துப்பூர்வமாக அளித்த பதில்:
சாக்கடையை கைகளால் சுத்தம் செய்ய தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதைத் தடை செய்தல் மற்றும் அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் சட்டம் கடந்த 2013-ல் இயற்றப்பட்டது. இச்சட்டத்தின்கீழ் 2014 ஜூலை 31-ம்தேதிப்படி நாட்டில் மொத்தமுள்ள 766 மாவட்டங்களில் 732 மாவட்டங்கள் மனிதக்கழிவை மனிதர்களே அகற்றும் முறையை முற்றிலுமாக ஒழித்துவிட்டதாக அறிவித்துள்ளன. இருப்பினும், இந்தியாவில் கடந்த 2014-ம் ஆண்டு முதல் சாக்கடை மற்றும் கழிவுநீர் தொட்டி சுத்தம் செய்கையில் 453 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், கைகளால் தூய்மைப்பணி செய்வதை தடுக்க தூய்மை இந்தியா திட்டத்தின்கீழ் ரூ. 371 கோடி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது. சிறிய கிராமங்களில் மேம்படுத்தப்பட்ட இயந்திரங்களை வாங்குவதற்கும், இயந்திரமயமாக்கல் மூலம் கைகளால் சாக்கடை சுத்தம் செய்யும் பணியை ஒழித்து தொழிலாளர்கள் பாதுகாப்பினை உறுதிப்படுத்தவும் இந்த நிதி செலவிடப்படும். இதுதவிர மாநிலங்கள் தோறும் இயந்திரமயமாக்கலை மேம்படுத்த 5,000 கழிவுநீர் தொட்டி வாகனங்கள், 1,100 கழிவகற்றும் இயந்திரங்கள், 1,000 தூர்வாரும் இயந்திரங்கள் வாங்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்களுக்குப் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும், அவசரகால கழிவுநீர் அகற்றுதலுக்கான உதவி எண்களை ஏற்படுத்தவும், இந்த விவகாரம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.