Published : 20 May 2018 05:56 PM
Last Updated : 20 May 2018 05:56 PM

பிஹார் முதல் கர்நாடகம் வரை: பாஜகவின் 4-வது தப்புக் கணக்கு

பிஹாரில் தொடங்கி கர்நாடகத் தேர்தல் வரை அரசியல் மரபுகளையும், ஒழுக்கத்தையும் மீறி செயல்பட்டதால் தலைக்குனிவு சம்பவங்களை பாஜக தொடர்ந்து சந்தித்து வருகிறது.

இந்த சம்பவங்களில் இருந்து பாடம் கற்றுக் கொண்டிருக்கும் என்ற எண்ணுகையில், கர்நாடகாவிலும் தப்புக் கணக்கு போட்டு ஆட்சியைக் கபளீகரம் செய்ய நினைத்து பாஜக தோல்வி அடைந்துள்ளது.

கடந்த 2017-ம் ஆண்டில் கோவா, மணிப்பூர், 2018-ல் மேகாலயா ஆகிய மாநிலங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை ஆளுநர்கள் மூலம் தேவைக்கு வளைத்து, அரசியல் மரபுகளை மீறி பாஜக ஆட்சி அமைத்தது. அதே அரசியல் மரபுமீறல் பூமாராங்காக பாஜகவுக்கு கர்நாடகத் தேர்தலில் திருப்பி அடித்து இருக்கிறது.

கோவா, மணிப்பூர், மேகாலாயா ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுக்காத பாஜக சிறிய கட்சிகளுடன் இணைந்து பெரும்பான்மை பலத்தைக் காட்டி ஆட்சி அமைக்கக் கோரியது. அதையும் அங்குள்ள ஆளுநர்கள் ஏற்றுக்கொண்டு ஆட்சி அமைக்க அனுமதித்தனர். ஆனால், அந்த மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்கக் கோரியும் அதற்கு ஆளுநர் வாய்ப்பு அளிக்கவில்லை.

அதேபோன்ற யுத்தியை கர்நாடகத் தேர்தலிலும் பாஜக பயன்படுத்த நினைத்தது. இங்கும் பாஜகவின் சார்பு ஆளுநர்தான் பதவியில் இருந்தார். ஆனால், இங்கு நிலை சற்று வித்தியாசமாக இருந்தது. தனிப்பெரும் கட்சியாக பாஜக உருவெடுத்தது, காங்கிரஸ், ஜேடிஎஸ் இணைந்து பெரும்பான்மை பலத்துடன் உருவாகின.

கோவா, மணிப்பூர், மேகாலயா மாநிலங்களில் தனிப்பெரும் கட்சிக்கு வாய்ப்பு அளிக்காத பாஜக, இங்கு தான் தனிப்பெரும் கட்சியாக தான் உருவெடுத்தவுடன் தான் ஆட்சி அமைக்கக் கோரியது. ஆளுநரும் அதற்கு ஏற்றார்போல் முடிவு எடுத்தார். . எம்எல்ஏக்களை எதிரணித் தரப்பிலிருந்து இழுத்துவிடலாம் என பாஜக எண்ணியது. ஆனால், கடைசி வரை அதனுடைய கணிப்புகள் அனைத்தும் பொய்யானது. பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் எடியூரப்பா முதல்வர் பதவியை இழந்தார். ஆட்சியைக் கைப்பற்றும் பாஜகவின் முயற்சி முறியடிக்கப்பட்டது. இது பாஜகவின் 4-வது தப்புக் கணக்காகும்.

முதல் கணக்கு

nitish-manjhi-759jpgநிதிஷ்குமார், ஜிதன் ராம் மாஞ்சி100 

பிஹாரில் கடந்த 2015-ம் ஆண்டு நிதிஷ்குமார் தலைமையிலான ஆட்சியில் குழப்பத்தை ஏற்படுத்தி மாஞ்சியுடன் உதவியுடன் ஆட்சி அமைக்க பாஜக முயன்றது எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம் என்ற பாஜகவின் முதல் கணக்கு இங்கு தவறானது.

பிஹாரில் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் கட்சி 2015-ல் ஆட்சியில் இருந்தது. அப்போது ஜிதன்ராம் மாஞ்சியை முதல்வராக நிதிஷ் குமார் நியமித்து இருந்தார். ஆனால், அங்கு எதிர்க்கட்சி வரிசையில் இருந்த பாஜக, மாஞ்சியுடன் ரகசியக் கூட்டுவைத்து, நிதிஷ்குமாருக்கு எதிராக மாஞ்சியைத் தூண்டிவிட்டது.

ஜிதன்ராம் மாஞ்சியும், முதல்வர் பதவியிலிருந்து விலக மறுத்தார். 87 எம்எல்ஏக்களை அழைத்துக்கொண்டு, பாஜகவுடன் இணைந்து ஆட்சி அமைக்க மாஞ்சி முனைந்தார்.

ஆனால், வேகமாக செயல்பட்ட நிதிஷ்குமார், தன்னுடைய 97 எம்எல்ஏக்களையும் அழைத்துக்கொண்டு ஆளுநரைச் சந்தித்து தனக்கு இருக்கும் பெரும்பான்மையை நிரூபித்தார்

பாஜகவை நம்பி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த சம்மதித்து அதில் தோல்வி அடைந்த மாஞ்சி முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். அடுத்த சில வாரங்களில் பாஜகவில் முறைப்படி மாஞ்சி இணைந்தார். பிஹாரிலும் மாஞ்சி மூலம் ஆட்சி அமைக்க போட்ட பாஜகவின் கணக்கு தப்புக்கணக்காக மாறியது.

ஆனால், தற்போது, அதே பாஜகவுடன் இணைந்து நிதிஷ்குமார் கூட்டணி ஆட்சி நடத்தி வருகிறார் என்பது வேறு கதை.

உத்தரகாண்ட் 2-வது தப்புக் கணக்கு

former-cm-ptijpgஉத்தரகாண்ட் முன்னாள் முதல்வர் ஹரிஸ் ராவத்100 

இரண்டாவதாக, உத்தரகாண்ட் மாநிலத்தில் 2016-ம் ஆண்டு மே மாதம் நடந்த சம்பவம் 2-வது தப்புக்கணக்காகும்.

அங்கு முதல்வராக இருந்த ஹரிஸ் ராவத்தை கீழே இறக்க கட்சிக்குள் குழப்பத்தை உண்டு செய்து எம்எல்ஏக்களை பிரித்தது பாஜக. இதனால், அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை பிரகடனம் செய்தது.

இதை எதிர்த்து காங்கிரஸ் தரப்பில் உத்தரகாண்ட் உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. குடியரசுத் தலைவர் ஆட்சியை உத்தரகாண்ட் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. இதை எதிர்த்து பாஜக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையாடு செய்யப்பட்டது. இதில் வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிட்டது. இதில் முதல்வர் ஹரிஸ் ராவத் தலைமையிலான அரசு பெரும்பான்மையை நிரூபித்து பாஜகவின் ஆட்சியைக் கைப்பற்றும் கணக்கை உடைத்தது. உத்தரகாண்ட்டிலும் எம்எல்ஏக்களை இழுத்து ஆட்சியைக் கைப்பற்றிவிடலாம் என்ற பாஜகவின் கணக்கு தப்பானது.

3-வது சம்பவம்

patel rahuljpgகாங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, அகமது படேல் 100 

3-வது சம்பவம் 2017-ம் ஆண்டு குஜராத்தில் மாநிலங்களவைத் தேர்தல் நடந்தது.. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட சோனியா காந்தியின் உதவியாளர் அகமது படேலை மாநிலங்களவை எம்.பி.யாக வெற்றி பெறக்கூடாது என்பதற்காக காங்கிரஸ் எம்எல்ஏல்கள் சிலரை கட்சியில் இருந்து விலக வைத்தது பாஜக.

ஆனால், அதிர்ச்சி அடைந்த காங்கிரஸ் கட்சி எம்எல்ஏக்களை குஜராத்தில் இருந்து விமானம் மூலம் பெங்களூருவில் உள்ள சொகுசு ஹோட்டலில் தங்க வைத்து பாதுகாத்தது.

தேர்தல் வாக்குப்பதிவின்போது, எம்எல்ஏக்களை அழைத்துவந்து காங்கிரஸ் கட்சி வாக்களிக்க வைத்தது. இதில் தேர்தல் ஆணையத்திடம் முறையீட்டு அகமது படேலின் வெற்றியைப் பறிக்க பாஜக பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டும் இறுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட அகமது படேல் வென்றார். எம்எல்ஏக்களை இழுத்துவிடலாம் என்று 3-வது முறையாக பாஜக போட்ட கணக்கு இங்கும் தவறானது.

ஆக, இந்த 4 மாநிலங்களிலும் சம்பவங்கள் வேறு வேறாக இருந்தாலும், எம்எல்ஏக்களை விலைக்கு வாங்குதல் என்ற ஒரு விஷயத்தைத் தான் ராஜதந்திரம் எனச் சொல்லி பாஜக தனதுபெருமையை நிலைநாட்ட முயன்றது. ஆனால், பாஜகவுக்கு கர்நாடகத்தில் கிடைத்த தலைக்குனிவு 4-வது சம்பவமாகும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x