

புதுடெல்லி: மக்களின் ஒத்துழைப்போடு இதுநடக்க வேண்டும் என்று விரும்பினேன் என்று ஜம்மு-காஷ்மீரில் அரசியலமைப்பு சட்டப்பிரிவின் 370-வது பிரிவு நீக்கம் குறித்து பிரதமர் மோடி கருத்து தெரிவித்துள்ளார்.
ஜம்மு-காஷ்மீரில் அமலில் இருந்த இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 370 நீக்கப்பட்டு நேற்றுடன் 5 ஆண்டுகள் நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து ஜம்மு- காஷ்மீரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது.
இந்நிலையில் புளுகிராப்ட் டிஜிட்டல் பவுண்டேஷன் என்ற அமைப்பு `370: அநியாயத்தை ஒழித்தல்: ஜம்மு-காஷ்மீருக்கு ஒரு புதிய எதிர்காலம்` என்ற தலைப்பிலான ஒரு புத்தகத்தை உருவாக்கி உள்ளது. பெங்குயின் எண்டர்பிரைசஸ் இம்பிரிண்ட் என்ற பதிப்பகம் இதை விரைவில் வெளியிடவுள்ளது.
இதில் ஜம்மு-காஷ்மீரில் 370-வதுபிரிவை நீக்குவதற்கான இலக்கை பிரதமர் மோடி எப்படி அடைந்தார் என்பது தொடர்பாக விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தில் பிரதமர் மோடி கூறியுள்ளதாவது: ஜம்மு-காஷ்மீரில் 370-வது அரசியலமைப்புப் பிரிவை நீக்க வேண்டும்என்ற முடிவை அமல்படுத்தும்போது, அதை ஜம்மு - காஷ்மீரில்உள்ள பொதுமக்களின் ஒத்துழைப்புடன் நிறைவேற்ற வேண்டும் என்று நான் விரும்பினேன்.
அவர்களின் சம்மதத்துடன்தான் இந்த முடிவை எடுக்கவேண்டும் என்ற முழுமையான தெளிவு என் மனதில் இருந்தது.
இந்தத் தீர்மானம் எப்போது எடுக்கப்பட்டாலும், அது திணிக்கப்படுவதை விட மக்களின் சம்மதத்துடன் நடக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.
முதல் புத்தகம்: இதுதொடர்பாக புத்தக பதிப்பாளர்கள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறும்போது, “ஜம்மு-காஷ்மீரில் 370-வது பிரிவு நீக்கம் இந்திய வரலாற்றில் மிகப் பெரிய அரசியலமைப்புச் சாதனையாக பார்க்கப்படுகிறது. இந்த மிகப்பெரிய விவகாரத்தை பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு சமாளித்தார் என்பது தொடர்பான சம்பவங்களை இந்த புத்தகம்விவரிக்கிறது. ஒரு விவகாரத்தில்பிரதமர் மோடி தலைமையிலானஅரசு எடுத்த முடிவுகள், செயல்முறை முழுவதுமாக ஆவணப்படுத்தப்பட்ட வகையில் இது முதல் புத்தகமாகும். பிரதமர் நரேந்திர மோடி, நாட்டின் அமைச்சர்கள், மத்திய அரசின் உயர் அதிகாரிகள் ஆகியோருடன் கலந்துரையாடி இந்த புத்தகம் தயாராகியுள்ளது’’ என்று கூறப்பட்டுள்ளது.