Last Updated : 04 May, 2018 03:33 PM

 

Published : 04 May 2018 03:33 PM
Last Updated : 04 May 2018 03:33 PM

‘அரசிலும், கட்சியிலும் பெண்களுக்கே முதலிடம்’: பிரதமர் மோடி புகழாரம்

மகளிர் மேம்பாடு என்ற நிலையில், மகளிர் தலைமையிலான வளர்ச்சி என்ற நிலைநோக்கி நாடு நகர்ந்து வருகிறது. அரசிலும், கட்சியிலும் பெண்களுக்கு முதலிடம் அளித்து வருகிறோம் என்று பிரதமர் மோடி கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் பேசினார்.

கர்நாடகத்தில் உள்ள 224 தொகுதிகளுக்கும் வரும் 12-ம் தேதி சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கிறது, 15-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பாஜக சார்பில் தேசியத் தலைவர் அமித் ஷாவும், பிரதமர் மோடியும் தீவிரமாக பிரச்சாரம் செய்து வருகின்றனர்.

பிரதமர் மோடியின் நமோ ஆப்ஸ் வாயிலாகக் கர்நாடக பாஜகவின் மகிளா மோர்ச்சா நிர்வாகிகளிடம் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது

இந்தத் தேசம் இன்று பெண்கள் வளர்ச்சி என்ற நிலையில் இருந்து, பெண்கள் தலைமையிலான வளர்ச்சி என்ற நிலை நோக்கி நகர்ந்து வருகிறது. நாட்டின் வளர்ச்சிக்கும், கட்சியின் வளர்ச்சிக்கும் இந்த மந்திரம் மிகவும் அவசியமாகும்.

எங்களைப் பொறுத்தவரை நிர்வாக அமைப்பாகட்டும், அரசாகட்டும், வேளாண் திட்டங்கள், கட்சியின் நிகழ்ச்சிகள் என எதுவானாலும் அதில் பெண்களுக்கே முதலிடம் அளித்து வருகிறோம்.

என்னுடைய அமைச்சரவையில் பாதுகாப்புத்துறையில் நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறையில் சுஷ்மா சுவராஜும் இருக்கிறார்கள். இருவரும் ஒருவகையில் கர்நாடக மாநிலத்தோடு தொடர்பு கொண்டவர்கள்தான்.

கர்நாடக மாநிலத்தில் இருந்துதான் மாநிலங்களவை எம்.பி.யாக நிர்மலா சீதாராமன் வந்துள்ளார், கடந்த 1999-ம் ஆண்டு பெல்லாரி தொகுதியில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்திக்கு எதிராக, சுஷ்மா சுவராஜ் போட்டியிட்டார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் நாம் ஏற்கனவே வெற்றி பெற்று இருக்கிறோம், அதுபோல் இந்த முறையும் வெற்றி பெற வேண்டும். அனைத்து பாஜக உறுப்பினர்களும் வெற்றிக்காக உழைக்க வேண்டும். ஒவ்வொரு பூத்வாரியாக நாம் வெற்றியை உறுதி செய்தால், நம்மை வீழ்த்த யாராலும் முடியாது.

நாட்டில் 12 வயதுக்குட்பட்ட குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்பவர்களை கடுமையாகத் தண்டிக்கும் வகையில் அவர்களுக்குத் தூக்கு தண்டனைக் கிடைக்க வழி செய்யும் அவசரச்சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது.

வீட்டை நிர்வாகம் செய்பவர்கள், வேலை உருவாக்குபவர்கள், வேலை தேடி அலைபவர்கள் அனைத்திலும் பெண்களுக்கு இந்த அரசு ஆதரவாக இருக்கிறது. சமூக, பொருளாதாரத்தில் ஆண்களுக்கு இணையாகப் பெண்களும் பங்கெடுத்துச் செயல்படுகிறார்கள்.

இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x