Last Updated : 23 May, 2018 08:49 AM

 

Published : 23 May 2018 08:49 AM
Last Updated : 23 May 2018 08:49 AM

திருவள்ளுவர் சிலையை அமைக்க உ.பி. நகர வளர்ச்சி ஆணையம் தடை: தடையை நீக்க பிரதமருக்கு ஆதித்யநாத் கோரிக்கை

உ.பி.யில் மொழிகளை இணைக்கும் அமைப்பாக அலகாபாத்தை தலைமையிடமாக கொண்டு ‘பாஷா சங்கம்’ 1976 முதல் செயல்பட்டு வருகிறது. இந்த அமைப்பு, அலகாபாத் சங்கமத்தின் தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயர் வைத்து அவரது சிலையையும் அமைக்க வேண்டி 1990-ம் ஆண்டு முதல் கோரி வருகிறது. இந்த செய்திகள் தொடர்ந்து ‘தி இந்து’வில் வெளியான நிலையில், தென்கரை சாலைக்கு திருவள்ளுவர் பெயருடன் அவரது சிலையும் அமைக்க கடந்த வருடம் ஜூன் 24-ல் அலகாபாத் மாநகராட்சி உத்தரவிடப்பட்டது.

இதையடுத்து, இன்மா இண்டர்நேஷனல் நிறுவன நிர்வாக இயக்குநர் இரத்தினவேல் கடந்த வருடம் ஜூலை 10-ல் திருவள்ளுவர் பெயர் இந்தி மற்றும் தமிழில் பொறிக்கப்பட்ட கல்வெட்டை திறந்து வைத்தார். அத்துடன் ரூ. 1 லட்சம் நன்கொடையாக அளித்தார்.

இதுகுறித்து ‘தி இந்து’விடம் பாஷா சங்க பொதுச் செயலாளராக இருக்கும் முதல் தமிழர் டாக்டர் எம்.கோவிந்தராஜன் கூறும்போது, ‘‘திருவள்ளுவர் சிலை அமைக்க அளித்த மனுவை அப்போதைய முதல்வர் அகிலேஷ், அலகாபாத் மாநகராட்சிக்கு அனுப்பினார். அதன்பிறகு சாலைக்கு திருவள்ளுவர் பெயரும் சிலையும் வைக்க மாநகராட்சி அனுமதி அளித்தது. ஆனால், அந்த இடம் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வருவதாகக் கூறி அலகாபாத் வளர்ச்சி ஆணையம் சிலை வைக்க தடை விதித்துள்ளது’’ எனத் தெரிவித்தார்.

பாஷா சங்க பொருளாளர் சந்திர மோகன் பார்கவா ‘தி இந்து’விடம் கூறுகையில், ‘‘தமிழை கற்றுக் கொண்ட சங்க நிறுவனர் மறைந்த டாக்டர் கிருஷ்ணசந்த் கவுடுவிற்கு திருக்குறள் பற்றி தெரிய வந்து, திருவள்ளுவர் மீது அதீத ஈடுபாடு உருவானது. இதனால் அவர், திருவள்ளுவருக்கு அலகாபாத்தில் சிலை வைப்பதற்கான கோரிக்கையை 1990-ல் வைத்தார். தற்போது பிரதமர் நரேந்திர மோடியும் திருவள்ளுவர் பற்றி அறிந்து அவர் தமிழகத்தில் ஆற்றிய உரைக்கு முன் திருக்குறள் கூறி துவக்கி உள்ளார்.

எனவே, தடையை நீக்கி சிலைக்கு அனுமதி வழங்க உபி முதல் அமைச்சர் யோகி ஆதித்யநாத்திடம் அளித்த மனுவின் நகலை பிரதமருக்கும் அனுப்பி காத்திருக்கிறோம்’’ எனத் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x