இறந்தவர் பாஜக ஆதரவாளர் என்பதால் இறுதிச்சடங்கு செய்ய மறுத்த இமாம் மீது வழக்கு

இறந்தவர் பாஜக ஆதரவாளர் என்பதால் இறுதிச்சடங்கு செய்ய மறுத்த இமாம் மீது வழக்கு
Updated on
1 min read

புதுடெல்லி: இறந்தவர் பாஜக ஆதரவாளர் என்பதால் அவருக்கு இறுதிச்சடங்கு செய்ய மறுத்த இமாம் மீது உத்தரபிரதேச போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

உ.பி.யின் முராதாபாத்தை சேர்ந்தவர் தில்நவாஸ் கான். பாஜக ஆதரவாளரான இவர் கடந்த ஜூலை 23-ம் தேதி மாரடைப்பால் இறந்தார். இதுபோல் இறந்த முஸ்லிம்களின் அடக்கத்திற்கு முன் அவரது உடலை தரையில் கிடத்தி, இறுதித் தொழுகை நடத்துவது வழக்கம். இது, அடக்கஸ்தலத்தில் அல்லது அருகிலுள்ள மசூதி வளாகத்தில் நடைபெறும்.

இந்த இறுதித் தொழுகையை நடத்திவைக்க, தில்நவாஸின் குடும்பத்தினர் அப்பகுதி இமாம் ராஷீதை அழைத்துள்ளனர். ஆனால் தில்நவாஸ் பாஜக ஆதரவாளர் என்பதால் இறுதித் தொழுகை நடத்தி வைக்க ராஷீத் மறுத்துள்ளார்.

இதையடுத்து இமாம் ராஷீத் மீது அப்பகுதி ஜமாத் நிர்வாகிகளிடம் தில்நவாஸின் குடும்பத்தினர் புகார் செய்துள்ளனர். அவர்களும் இதே காரணத்துக்காக புகாரை காதில் போட்டுக்கொள்ளவில்லை.

5 பேரிடம் விசாரணை: இதைத்தொடர்ந்து தில்நவாஸ் குடும்பத்தினர், முராதாபாத் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகாரை ஏற்ற போலீஸார், இமாம் ராஷீத் மற்றும் ஜமாத் நிர்வாகிகள் 4 பேர்மீது குற்ற வழக்கு பதிவுசெய்து விசாரணையை தொடங்கி உள்ளனர்.

ராஷீத், கடந்த 7 ஆண்டுகளாக முராதாபாத் நகர மசூதியின் இமாம் ஆக உள்ளார். இந்த இமாம் பணியில் இருப்பவர்கள் தான் மசூதி தொழுகையுடன் இறந்தவர்களின் இறுதித் தொழுகையையும் நடத்தி வைக்க வேண்டும். இதில் இறந்தவர் யார் என்ற பாகுபாடு கூடாது என்ற மரபு கடைப்பிடிக்கப்படுகிறது.

இந்நிலையில் இறந்தவர் பாஜக ஆதரவாளர் என்பதற்காக இறுதித் தொழுகையை இமாம் நடத்த மறுத்தது சர்ச்சையாகியுள்ளது. இதற்கு முராதாபாத் பாஜகவினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

இப்பிரச்சினையில் விசாரணை நடத்தி குற்றவாளிகளை தண்டிக்கும்படி காவல் துறைக்கு முராதாபாத் மாவட்ட ஆட்சியர் அனுஜ்குமாரும் உத்தரவிட்டுள்ளார்.

மேற்கு உ.பி.யில் உள்ள முராதாபாத் சுமார் 70 சதவீதம் முஸ்லிம்கள் வாழும் பகுதியாக உள்ளது. இங்குள்ள முஸ்லிம்களில் பெரும்பாலானோர் பாஜக எதிர்ப்பாளர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in