வினாத்தாள் கசிவு பரவலாக இல்லாததால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்

வினாத்தாள் கசிவு பரவலாக இல்லாததால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது: உச்ச நீதிமன்றம்
Updated on
1 min read

புதுடெல்லி: வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் இல்லாததால் இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

வினாத்தாள் கசிவை அடுத்து இளநிலை நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி மாணவர்கள் பலர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுக்களை, உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டிஒய் சந்திரசூட், நீதிபதிகள் ஜே.பி. பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் இன்று (வெள்ளிக்கிழமை) தீர்ப்பை வழங்கினர். உச்ச நீதிமன்றம் இன்று (ஆக. 2) வழங்கிய தீர்ப்பில், "நீட் தேர்வின் வினாத்தாள் கசிவு பரவலாகவும் திட்டமிட்ட ரீதியிலும் நடைபெறவில்லை. இதனால், தேர்வின் புனிதத்தன்மை கெட்டுவிட்டதாகக் கூற முடியாது. எனவே, இந்த ஆண்டு நடைபெற்ற இளநிலை நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது.

அதேநேரத்தில், நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதால்தான் முன் எப்போதும் இல்லாத வகையில் 44 மாணவர்கள் முழு மதிப்பெண்களை பெற்றிருக்கிறார்கள். எனவே, அடுத்த ஆண்டு இதுபோன்ற மோசமான முறையில் தேர்வு நடத்தப்படுவதைத் தவிர்க்க தேசிய தேர்வு முகமையும் மத்திய அரசும் தீவிர கவனம் செலுத்த வேண்டும்.

தேர்வு முறையில் உள்ள குறைபாடுகளை சரி செய்ய அமைக்கப்பட்டுள்ள இஸ்ரோ முன்னாள் தலைவர் கே. ராதாகிருஷ்ணன் தலைமையிலான குழு தனது அறிக்கையை செப்டம்பர் 30ம் தேதிக்குள் உச்ச நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நவீன தொழில்நுட்பங்களின் அடிப்படையில் தேர்வு முறையை வலுப்படுத்தி நிலையான இயக்க நடைமுறைகளை (எஸ்ஓபி) உருவாக்குவது குறித்து ராதாகிருஷ்ணன் குழு பரிசீலிக்க வேண்டும்” என்று தெரிவித்துள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in