Published : 02 Aug 2024 06:15 AM
Last Updated : 02 Aug 2024 06:15 AM

புதிய நாடாளுமன்றத்துக்குள் மழைநீர் சொட்டுகிறது; வெளியே வினாத்தாள், உள்ளே மழைநீர் கசிவு: எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கிண்டல்

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் மழை நீர் சொட்டிய விவகாரத்தை கையில் எடுத்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மத்திய அரசை கடுமையாக விமர்சித்துள்ளனர்.

டெல்லியில் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் கடந்தாண்டு மே மாதம் பிரதமர் மோடியால் திறந்து வைக்கப்பட்டது. மிக நவீன தொழில்நுட்பத்துடன் இந்த கட்டிடம் கட்டப்பட்டிருந்தது. ஆனால் டெல்லியில் கடந்த சில நாட்களாக பெய்த கனமழை காரணமாக, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் உள்ள கூடம் ஒன்றின் மேற்கூரையிலிருந்து நேற்று தண்ணீர் சொட்டியது.

அந்த தண்ணீர் தரையில் சிதறாமல் இருக்க பிளாஸ்டிக் வாளி ஒன்றும் வைக்கப்பட்டிருந்தது. இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது.

இது குறித்து எக்ஸ் தளத்தில் கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர், ‘‘வெளியே வினாத்தாள் கசிவு, உள்ளே மழை நீர் கசிவு. நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடடம் கட்டி ஓராண்டுதான் ஆகிறது. அதற்குள் குடியரசுத் தலைவர் அறைக்கு அருகே உள்ள பொதுக்கூடத்தில் மழை நீர் கசிகிறது. புதிய கட்டிடம் மழைக்காலத்துக்கு தாக்குபிடிக்குமோ என்பது குறித்து உடனே ஆராய வேண்டும். மழைநீர் கசிவுக்கான காரணம் குறித்து விசாரிக்க சிறப்புக் குழுவைஅமைக்க வேண்டும். இது குறித்து மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் தாக்கல் செய்துள்ளேன்’’ என பதிவிட்டுள்ளார்.

சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் கூறுகையில், ‘‘பல ஆயிரம் கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை விட, பழைய நாடாளுமன்ற கட்டிடம் சிறந்தது. இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணும் வரை, நாம் ஏன் பழைய நாடாளுமன்ற கட்டிடத்துக்கு செல்லக் கூடாது?’’ என குறிப்பிட்டுள்ளார்.

ஆம் ஆத்மி கட்சி எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ‘‘ரூ.1200 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய நாடாளுமன்ற கட்டிடம், ரூ.120 மதிப்புள்ள பிளாஸ்டிக் வாளியை சார்ந்து உள்ளது’’ என கிண்டல் அடித்துள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x