Published : 01 Aug 2024 04:46 AM
Last Updated : 01 Aug 2024 04:46 AM

கர்நாடக முதல்வர் சித்தராமையா மீதான ஊழல் புகார்: காங்கிரஸ் கட்சி மேலிடம் ஆலோசனை

சித்தராமையா

பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சியில் கடந்த இரு மாதங்களில் பால் விலை, சொத்துவரி மற்றும்பேருந்து கட்டணம் ஆகியவை உயர்த்தப்பட்டது.

இதனால் பொதுமக்கள்கடும் அதிருப்தி அடைந்துள்ள நிலையில் எதிர்க்கட்சிகள் தொடர்போராட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இதேபோல எஸ்.சி, எஸ்.டிசிறப்பு உட்கூறு நிதியை, அரசின்இலவச திட்டங்களுக்கு பயன்படுத்தியதற்கும் எதிர்ப்பு எழுந்துள்ளது.

இதனிடையே வால்மீகி பழங்குடியினர் ஆணையத்தில் ரூ.187கோடி முறைகேடு நடந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் பழங்குடியினர் நலத்துறையின் அமைச்சராக இருந்த நாகேந்திரா தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது வீட்டில் சோதனை நடத்திய அமலாக்கத்துறை அதிகாரிகள், நாகேந்திராவை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் முதல்வர் சித்தராமையாவின் மனைவி பார்வதிக்கு மைசூருவில் மாற்று நிலம் ஒதுக்கிய விவகாரம் அரசுக்கு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு எதிராக தொடர் போராட்டத்தை முன்னெடுத்துள்ள பாஜக, மஜத ஆகிய கட்சிகள், சித்தராமையா தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என கோரி வருகின்றன.

இந்நிலையில் காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூன கார்கே நேற்று முன்தினம் சித்தராமையாவையும், டி.கே.சிவகுமாரையும் உடனடியாக டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து இருவரும் டெல்லிக்கு சென்று மல்லிகார்ஜூன கார்கே, மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் ஆகியோரை சந்தித்தனர்.

அப்போது மேலிட தலைவர்கள், அவ்விருவரிடமும் கர்நாடகஅரசின் மீதான புகார், சித்தராமையா மீதான ஊழல் புகார் குறித்து விசாரித்தனர். மேலும் அமைச்சரவை மாற்றம், பாஜகவின் போராட்டத்தை சமாளிப்பது குறித்தும் விசாரித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x