திருமலையில் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து பரிசீலனை: திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் சிறப்பு பேட்டி

சியாமள ராவ்
சியாமள ராவ்
Updated on
1 min read

திருப்பதி: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் புதிய நிர்வாக அதிகாரியாக ஐஏஎஸ் அதிகாரி சியாமள ராவ் பொறுப்பேற்றுள்ளார். அவரதுநிர்வாக செயல்பாடுகள் பக்தர்களின் வரவேற்பை பெற்று வரும்நிலையில் ‘இந்து தமிழ் திசை’ நாளிதழுக்காக அவரை சந்தித்தோம்.

அப்போது அவர் கூறியதாவது: சாமானிய பக்தர்களுக்கு முன்னுரிமை வழங்கும் நோக்கத்தில் தான் நான், அனைத்து விஷ யங்களையும் பார்க்கிறேன்.

அன்னதானம் வழங்குவது, ஐடி துறையின் செயல்பாடு, லட்டு பிரசாதத்தின் தரம், திருமலையில் சிறிய ஓட்டல்கள் முதல் பெரிய ஓட்டல்கள் வரை செயல்படும் விதம், விலைப்பட்டியல், சுற்றுச்சூழல் பாதுகாப்பு, வைகுண்டம் க்யூ காம்ப்ளக்ஸில் பக்தர்களுக்கான வசதிகள் போன்ற பல்வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் ஆய்வு நடத்தி, அதில் உள்ள குறைகளை சரிசெய்து வருகிறேன்.

நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 80 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சுவாமியை தரிசிக்க இயலும். அப்படிப்பட்ட சூழலில் பக்தர்கள் இன்னல்கள் இன்றி சுவாமியை தரிசனம் செய்வதற்கு தேவையான ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் ஆன்லைனில் மிக விரைவாக தீர்ந்து விடுகிறது. இதனால் திருமலைக்கு நேரில் வரும் பக்தர்களுக்கு தர்ம தரிசனம் போன்று, ரூ.300 டிக்கெட்டும் வழங்கப்படுமா என கேட்கிறீர்கள்.

ஆன்லைன் மூலம் நாட்டில் எந்த மூலையில் இருக்கும் பக்தர்களும் சுலபமாக அவர்களுக்கு தேவையான தேதியில் முன்கூட்டியே டிக்கெட்டுகளை பெற முடிகிறது. ஆன்லைன் டிக்கெட்டுகளுக்கு தேவை அதிகமாக இருந்தாலும் ஒரு நாளைக்கு எவ்வளவு பக்தர் கள் தரிசனம் செய்ய முடியுமோ அத்தனை டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படுகிறது. நேரடியாக திருமலைக்கு வரும் பக்தர்களுக்கு ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட் வழங்குவது குறித்து பரிசீலிக்கப்படும்.

உடனடி தரிசனம்: இதேபோன்று எவ்வித ஏற்பாடுகளும் செய்து கொள்ளாமல் வரும்பக்தர்களும் சுவாமி தரிசனம் செய்வதற்காக, ஆதார் அட்டை மூலம் தரிசனம் செய்ய அனுமதிப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது . இவ்வாறு தேவஸ்தான நிர்வாக அதிகாரி சியாமள ராவ் தெரிவித்தார்.

திருமலை திருப்பதி தேவஸ்தானத்திற்கு புதிய அறங்காவலர் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இம்மாதம் நியமிக்கப்பட உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in