

புதுடெல்லி: கர்நாடக அரசு மேகேதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி, சுமுக தீர்வு காண பிரதமர் மோடி அறிவுரை வழங்கியுள்ளார்.
காவிரியின் குறுக்கே மேகேதாட்டு என்னும் இடத்தில் கர்நாடக அரசு ரூ.9 ஆயிரம் கோடி செலவில்புதிய அணை கட்ட முடிவெடுத்துள்ளது. இதற்கான விரிவான திட்ட அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்துள்ளது. இதற்கு தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக துணைமுதல்வரும், நீர்வளத் துறை அமைச்சருமான டி.கே.சிவகுமார்நேற்று பிரதமர் நரேந்திர மோடியை டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது, மேகேதாட்டுவில் புதியஅணை கட்ட மத்திய அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அதற்கு பிரதமர் மோடி, “மேகேதாட்டு அணை தொடர்பாக கர்நாடக அரசு தமிழக அரசுடன் அமர்ந்து பேசி தீர்வு காண வேண்டும். இதில் மத்திய அரசு தலையிடமுடியாது” என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்த சந்திப்புக்குப் பின்னர் டி.கே.சிவகுமார் கூறுகையில், “தற்போது கர்நாடகாவில் கனமழை பெய்து வருவதால் காவிரியில் அளவுக்கு அதிகமாகவே தமிழ்நாட்டுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. நீர் பங்கீட்டில் எந்த பிரச்சினையும் இல்லை. மேகேதாட்டு விவகாரத்தில் தமிழக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த கர்நாடகா தயாராக இல்லை” என்றார்.