Published : 31 Jul 2024 09:31 PM
Last Updated : 31 Jul 2024 09:31 PM

கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் சுட்டுக் கொலை: டெல்லியில் பயங்கரம்

புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் கணவருடன் இருசக்கர வாகனத்தில் பயணித்த பெண் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டார். கோகுல்புரி பகுதியில் நடந்துள்ள இச்சம்பவம் தொடர்பாக போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதியம் 3.15 மணி அளவில் இந்த பயங்கர செயல் அரங்கேறியுள்ளது. ஹீரா சிங் என்பவர் தனது மனைவி சிம்ரன்ஜித் கவுர் உடன் புல்லட் மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். அப்போது கோகுல்புரி பாலத்தில் மற்றொரு இருசக்கர வாகனத்தில் வந்தவருடன் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இரண்டு வாகனமும் ஒன்றை ஒன்று உரசிக் கொண்டது இதற்கு காரணம் என தெரிகிறது.

அப்போது பாலத்துக்கு கீழே சுமார் 30-35 அடி தொலைவில் இருந்து ஒரு நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அது சிம்ரன்ஜித்தை தாக்கியுள்ளது. அதில் அவரது கழுத்துக்கு அருகே நெஞ்சு பகுதியில் குண்டு பாய்ந்துள்ளது. சரிந்து விழுந்த அவரை ஹீரா சிங், ஜிடிபி மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். அங்கு அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக டெல்லி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சம்பவ இடத்தில் பதிவாகி உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் கொலையாளியை தேடி வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி போலீஸாரை சமூக வலைதள பயனர்கள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x