

புதுடெல்லி: மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம்ஆண்டு நடைபெற்ற குடிமைப்பணிகள் தேர்வில் தேர்ச்சி பெற்று பயிற்சி ஐஏஎஸ் அதிகாரியானவர் பூஜா கேத்கர். யுபிஎஸ்சி தேர்வில் மிகக் குறைந்த மதிப்பெண் எடுத்திருந்த பூஜா கேத்கர், மாற்றுத்திறனாளிகளுக்கான இட ஒதுக்கீட்டையும் இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்தினருக்கான இட ஒதுக்கீட்டையும் தவறாகப் பயன்படுத்தி பணியைப் பெற்றுள்ளார் என்று புகார் எழுந்தது.
இதையடுத்து, பூஜா கேத்கரின் பயிற்சியை மாநில அரசு நிறுத்தி வைத்தது. இதனிடையில், பூஜா கேத்கரின் தேர்வை மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) ரத்து செய்துள்ளது. எதிர்காலத்திலும் அவர் யுபிஎஸ்சிதேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக அவருக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதையொட்டி, போலி சான்றிதழ் விவகாரம் தொடர்பாக யுபிஎஸ்சி அளித்த புகாரின் கீழ் பூஜா கேத்கர் மீது டெல்லி காவல் துறை முதல்தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது. இந்நிலையில், டெல்லி நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரிபூஜா தாக்கல் செய்த மனு மீதுஇன்று விசாரணை நடைபெற விருக்கிறது.