

காஷ்மீரில் நடந்த கல்வீச்சு சம்பவத்தில் பலியான சென்னை இளைஞரின் மரணத்துக்கு பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை காஷ்மீர் அரசு உறுதிப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இதுகுறித்து இன்று (செவ்வாய்க்கிழமை) டெல்லியில் சானா பவனில் கருத்தரங்கம் ஒன்றில் நிர்மலா சீதாராமன் பேசும்போது, "இது முற்றிலும் கண்டிக்கத்தக்கது. பயங்கரவாதிகள் வலிமையாக இருப்பதற்கு பாதுகாப்புப் படைகள் பொறுப்பேற்க முடியாது. காஷ்மீர் முதல்வர் மெகபூபா முஃப்தி தனது மாநிலத்துக்கு சுற்றுலாப் பயணிகள் அதிகம் வர வேண்டும் என்று விருப்பம் தெரிவித்திருந்தார். ஆனால், காஷ்மீர் கல்வீச்சு சம்பவத்தில் ஒரு சுற்றுலாப் பயணி காயப்பட்டு இறந்திருக்கிறார் என்றால், நிறைய சுற்றுலாப் பயணிகள் தங்கள் மாநிலத்துக்கு வர வேண்டும் என்ற காஷ்மீர் முதல்வரின் விருப்பம் சரியானது அல்ல. காஷ்மீர் அரசு சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்'' என்று கூறினார்.
காஷ்மீரில் சில நாட்களுக்கு முன்னர் 5 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். தவிர பொதுமக்களில் ஒருவர் இறந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்து பிரிவினைவாதிகள் திங்கட்கிழமை முழு அடைப்புப் போராட்டம் நடத்தினர். மாநிலம் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
ஸ்ரீநகரின் புறநகர் நர்பால் பகுதியில் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
பாதுகாப்புப் படையினர் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டதில், காஷ்மீருக்கு சுற்றுலா வந்த சென்னை இளைஞர் ஆர்.திருமணி (22) தலையில் படுகாயம் அடைந்தார்.
பாதுகாப்புப் படையினர் அவரை ஸ்கிம்ஸ் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இத்தகவலை பாதுகாப்புப் படை அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.