

புதுடெல்லி: சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ், சமீபத்தில் நடந்த மக்களவைத் தேர்தலில் கன்னோஜ் தொகுதி எம்.பி.யாக தேர்ந்தெடுக் கப்பட்டார். இதையடுத்து கர்ஹால் தொகுதி எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தார். இதனால் அவர் வகித்த சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் காலியானது.
இப்பதவியில் அகிலேஷுக்கு முன்பாக சமாஜ்வாதியின் முக்கிய முஸ்லிம் தலைவரான ஆசம்கான், அகிலேஷின் சித்தப்பா ஷிவ்பால் யாதவ் ஆகியோர் இருந்துள்ளனர். ஆசம்கான் தற்போது சிறையில் இருப்பதால் அப்பதவி மீண்டும் ஷிவ்பாலுக்கே கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், எவரும் எதிர்பாராத வகையில் அப்பதவிக்கு மாதா பிரசாத் பாண்டேவை (72) அகிலேஷ் நியமித்துள்ளார். கிழக்கு உ.பி.யைச் சேர்ந்த இவர் 7-வது முறை எம்எல்ஏ ஆனவர்.
முலாயம் முதல்வராக இருந்தபோது இருமுறை உ.பி. அமைச்சராகவும் இருந்துள்ளார். உ.பி. சட்டப்பேரவை சமாஜ்வாதி தலைவராகவும் இருந்துள்ளார். மாதா பிரசாத் தவிர பேரவையின் கட்சித் தலைவர் மற்றும் துணைத்தலைவர் பதவியில் முறையே முஸ்லிம் மற்றும் தலித் சமூகத்தினரை அகிலேஷ் நியமித்துள்ளார்.
சமீபத்திய மக்களவைத் தேர்தலில் பிடிஏ (பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் சிறுபான்மையினர்) சமூகத்தினருக்கு ஆதரவாக சமாஜ்வாதி கட்சி குரல் கொடுத்தது. இதற்கு நல்ல பலனும் கிடைத்தது. உ.பி.யின் 80 மக்களவை தொகுதிகளில் 37-ல் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. 62 தொகுதிகள் வைத்திருந்த பாஜக 33-க்கு தள்ளப்பட்டது.
பிடிஏ சமூகத்தினரை தொடர்ந்து பிராமணர்களை அகிலேஷ் குறிவைத்திருப்பதாகக் கருதப்படு கிறது. இதற்குமுன், ரேபரேலி எம்எல்ஏவான மனோஜ் பாண்டேசமாஜ்வாதியின் பேரவை தலைவராக இருந்தார். பிராமணரான இவர்,பாஜகவுக்கு ஆதரவாக மாறினார். மக்களவைத் தேர்தலில் உயர் சமூகத்தினர் 11 பேருக்கு மட்டுமே அகிலேஷ் வாய்ப்பு அளித்தார். இதில் 5 பேர் வெற்றி பெற்றனர். இப்போது பிராமணர்களையும் சேர்த்துஅகிலேஷ் தனது ஆதரவு தளத்தை விரிவுபடுத்தியுள்ளார். உ.பி.யில் 10 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெறஉள்ளது. இதில் அகிலேஷின் உத்தி பலன் அளிக்குமா என்பதுதெரியவரும்.