Last Updated : 18 May, 2018 07:03 AM

 

Published : 18 May 2018 07:03 AM
Last Updated : 18 May 2018 07:03 AM

கர்நாடக முதல்வராக பதவியேற்றார் எடியூரப்பா; விரைவில் பெரும்பான்மையை நிரூபிப்பேன் என உறுதி: காங்கிரஸ், மஜத கட்சிகள் கடும் எதிர்ப்பு

காங்கிரஸ், மஜத ஆகிய கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, கர்நாடக மாநிலத்தின் 23-வது முதல்வராக எடியூரப்பா நேற்று பதவி ஏற்றுக் கொண்டார். விரைவில் சட்டப்பேரவையை கூட்டி பெரும்பான்மையை நிரூபிப்பேன் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் நடந்த கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 104, காங்கிரஸ் 78, மதச்சார்பற்ற ஜனதா தளம் (மஜத) 38, மற்றவை 2 ஆகிய‌ இடங்களைப் பெற்றன. எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்க தேவையான 112 இடங்கள் கிடைக்கவில்லை. இதனால் பாஜக ஆட்சிக்கு வருவதை தடுக்கும் வகையில், மஜத ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு தெரிவித்தது. இதையடுத்து, மஜத மாநில தலைவர் குமார சாமி ஆளுநர் வஜுபாய் வாலாவை சந்தித்து, மஜத, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் 2 சுயேச்சைகள் உட்பட 118 எம்எல்ஏக்களின் ஆதரவு இருப்பதாகக் கூறி, ஆட்சி அமைக்க உரிமை கோரினார்.

இதனிடையே பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்களின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட எடியூரப்பா, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜகவை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என்று ஆளுநரிடம் கடிதம் அளித்தார். இந்நிலையில், ஆளுநர் வஜுபாய் வாலா நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் ஆட்சி அமைக்க வருமாறு எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுத்தார். பெரும்பான்மையை நிரூபிக்க 15 நாள் அவகாசம் கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மஜத, காங்கிரஸ் கட்சிகள் உச்ச நீதிமன்றத்தில் நள்ளிரவில் அவசர மனுவை தாக்கல் செய்தன‌. இதை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம் நள்ளிரவு 1.45 மணிக்கு கூடியது. நீதிபதிகள் ஏ.கே.சிக்கிரி, அசோக் பூஷன் மற்றும் எஸ்.ஏ.பாப்தே ஆகியோர் முன்னிலையில் நடந்த விசாரணையில் மஜத, காங்கிரஸ் சார்பில் மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வியும் பாஜக சார்பில் முகுல் ரோஹத்கியும் வாதிட்டனர்.

அதிகாலை காலை 5 மணி வரை 3 மணி நேரமாக இரு தரப்புக்கும் இடையே காரசார வாதம் நடந்தது. இறுதியில் எடியூரப்பாவின் பதவி ஏற்பு விழாவுக்கு தடை விதிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர். மேலும் எடியூரப்பா ஆளுநரிடம் அளித்துள்ள எம்எல்ஏக்கள் ஆதரவு கடிதத்தின் நகலை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டு, வழக்கை வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைத்தனர்.

இதையடுத்து நேற்று காலை 9 மணி அளவில் பாஜக மாநில தலைவர் எடியூரப்பா தனது தொண்டர்களுடன் பெங்களூருவில் உள்ள ராஜ்பவனுக்கு வந்தார். அவருடன் மத்திய அமைச்சர்கள் அனந்த் குமார், சதானந்த கவுடா, பிரகாஷ் ஜவடேகர், தர்மேந்திர பிரதான், ஆதரவாளர் ஷோபா கரந்தலாஜே உள்ளிட்டோரும் வந்தனர். அங்கு மிக எளிமையாக நடந்த நிகழ்ச்சியில் கர்நாடகாவின் 23-வது முதல்வராக எடியூரப்பா கடவுளின் பெயராலும் விவசாயிகளின் பெயராலும் பதவி ஏற்றுக்கொண்டார். அவருக்கு ஆளு நர் வஜுபாய் வாலா பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.

அப்போது ஆளுநர் மாளிகைக்கு முன்பு தர்ணாவில் ஈடுபட காங்கிரஸ், மஜத தலைவர்கள் முயன்றனர். போலீஸார் அனுமதி மறுத்ததால் சட்டப்பேரவை வளாகத்தில் உள்ள காந்தி சிலைக்கு முன்பாக முன்னாள் பிரதமர் தேவகவுடா, குமாரசாமி, மக்களவை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, முன்னாள் முதல்வர் சித்தராமையா உள்ளிட்டோர் ஆளுநரை கண்டித்து தர்ணாவில் ஈடுபட்டனர்.

விவசாய கடன் தள்ளுபடி

முதல்வராக பதவியேற்ற பிறகு எடியூரப்பா கூறும்போது, “தேசிய வங்கிகளில் பெறப்பட்ட ரூ.1 லட்சம் வரையிலான விவசாய கடன் அனைத்தையும் தள்ளுபடி செய்து முதல் கையெழுத்திட்டுள்ளேன். இதன்மூலம் அரசுக்கு ரூ.56 ஆயிரம் கோடி சுமை ஏற்படும்.

ஆளுநர் அளித்துள்ள 15 நாட்கள் கால அவகாசத்துக்கு முன்பாகவே சட்டப்பேரவையை கூட்டி, நம்பிக்கை வாக்கெடுப்பு கோருவேன். அதில் 100 சதவீதம் வெற்றி பெறுவேன். அடுத்த 5 ஆண்டுகள் ஆட்சியை நிறைவு செய்வேன். காங்கிரஸ், மஜதவை சேர்ந்த 24 பேர் வரை எனக்கு ஆதரவு தர தயாராக இருக்கிறார்கள். எனவே அனைத்து எம்எல்ஏக்களின் ஆதரவுடன் பெரும்பான்மையை நிரூபிப்பேன். காங்கிரஸ், மஜத பாவக் கூட்டணி. மக்களால் நிராகரிக்கப்பட்ட அவர்கள் அதிகாரத்தை கைப்பற்ற‌ அலைகிறார்கள்” என்றார்.

கோவா, மேகாலயா, மணிப்பூரில்

இதனிடையே, கர்நாடகாவைப் பின்பற்றி கோவா, மேகாலயா, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள தங்கள் கட்சியை ஆட்சி அமைக்க அழைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி போர்க்கொடி தூக்கி உள்ளது. இதே கோரிக்கையை பிஹாரில் ராஷ்டிரிய ஜனதா தளமும் முன்வைத்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x