Last Updated : 08 May, 2018 08:40 AM

 

Published : 08 May 2018 08:40 AM
Last Updated : 08 May 2018 08:40 AM

காவிரியில் தண்ணீர் திறக்க கர்நாடக அரசு தொடர்ந்து மறுப்பு: உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு- தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று விசாரணை நடைபெறுகிறது

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு காவிரி நீரை திறக்க கர்நாடக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. இதைக் கண்டித்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு மனு தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா முன்பு இன்று விசாரணைக்கு வருகிறது.

காவிரி நடுவர் மன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், அந்த தீர்ப்பை நடைமுறைப்படுத்த 6 வாரங்களுக்குள் செயல் திட்டத்தை (ஸ்கீம்) உருவாக்கு மாறு மத்திய அரசுக்கு கடந்த பிப்ரவரியில் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி, கூடுதல் அவகாசம் கேட்டதுடன் ஸ்கீம் என்பதற்கான விளக் கம் கோரியது.

இதையடுத்து, தமிழக அரசு தாக்கல் செய்த மனுவில், “காவிரி நடுவர் மன்றம் தனது தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற் றும் ஒழுங்கு முறை ஆணையம் ஆகிய இரு அமைப்புகளையே செயல் திட்டம் என குறிப்பிட்டுள்ளது. எனவே காவிரி வாரியம் அமைக்க உத்தரவிட வேண்டும்” என முறையிட்டது.

இதையடுத்து, மே 3-ம் தேதிக் குள் செயல் திட்ட வரைவு அறிக்கையை தாக்கல் செய்யுமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் மத்திய அரசு, “பிரதமர் நரேந்திர மோடியும் மத் திய அமைச்சர்களும் கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதால் செயல் திட்ட வரைவு அறிக்கையில் கையெழுத்து பெற இயலவில்லை. எனவே கூடுத லாக 2 வார கால அவகாசம்வேண்டும்” எனக் கோரியது.

அதை ஏற்க மறுத்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, “மே 8-ம் தேதிக்குள் (இன்று) காவிரி தீர்ப்பை செயல்படுத்தும் வரைவு அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும். அத்துடன் கர்நாடக அரசு தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீரை உடனடியாக திறந்துவிட வேண்டும்” என உத் தரவிட்டார்.

போதிய மழை இல்லை

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வரவுள்ள நிலையில், கர்நாடக அரசு நேற்று இடைக்கால மனு ஒன்றை தாக்கல் செய்தது.

அதில், “காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த பருவ மழை காலத்தில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் காவிரியின் குறுக்கே உள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி, ஹாரங்கி, ஹேமாவதி ஆகிய அணைகளில் போதிய நீர் இல்லை. தற்போது உள்ள நீரைக் கொண்டே வறட்சி காலத்தில் குடிநீருக்கும் பாசனத்துக்கும் பயன்படுத்த வேண்டியுள்ளது. எனவே உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி தமிழகத்துக்கு 4 டிஎம்சி நீரை திறக்க இயலாது.

காவிரி நடுவர் மன்ற ஆணையின்படி இந்த ஆண்டில் ஏப்ரல் வரை தமிழகத்துக்கு 116.74 டிஎம்சி நீர் திறக்கப்பட்டுள்ளது. வறட்சி காலத்தில் வழங்கப்பட்டதைவிட தற்போது 16.66 டிஎம்சி நீர் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளது. எனவே தமிழகத்துக்கு இப் போது நீரை திறந்துவிட வேண் டிய அவசியமும் இல்லை” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம்

இதற்கு தமிழக அரசு தாக்கல் செய்த பதில் மனுவில், “காவிரி நடுவர் மன்ற தீர்ப்பின்படி ஏப்ரல் மாதத்துக்குள் வழங்க வேண்டிய 4 டிஎம்சி நீரில் கர்நாடகா இதுவரை 1.4 டிஎம்சி நீரை மட்டுமே வழங்கியுள்ளது. மீதமுள்ள 2.6 டிஎம்சி நீரை உடனடியாக திறக்க உத்தரவிட வேண்டும். கர்நாடகா வில் உள்ள 4 அணைகளிலும் இப் போது 19 டிஎம்சி நீர் உள்ளது. இதில் 4 டிஎம்சி நீரை திறப்பதால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது.

தமிழகத்துக்கு தர வேண்டிய நீரை கர்நாடகா தொடர்ந்து மறுத்து வருகிறது. உச்ச நீதிமன் றம் உத்தரவிட்டாலும் அதை செயல்படுத்தாமல் அலட்சியம் காட்டுகிறது. இந்த சிக்கலை தீர்க்க காவிரி மேலாண்மை வாரி யம் அமைப்பது மட்டுமே தீர்வாக இருக்கும். எனவே காலதாமதம் செய்யாமல், காவிரி வாரியம் அமைக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். வாரியம் அமைக்கப்பட்டால், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி நீரை பங்கீடும் அதிகாரம் அந்த அமைப்புக்கு கிடைத்துவிடும். காவிரி நதி நீர் சிக்கலுக்கு தீர்வு ஏற்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு பிரமாணப் பத்திரம்

இந்நிலையில் மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் நேற்று புதிய பிரமாண பத்திரம் ஒன்றைத் தாக்கல் செய்துள்ளது. அதில், “காவிரி வழக்கில் உச்ச நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவதற்கான‌ அனைத்து நடவடிக்கைகளையும் மத்திய அரசு எடுத்து வருகிறது. தீர்ப்பை முழுமையாக அமல்படுத்துவதற்கான செயல்பாடுகளையும் மத்திய அரசு செய்யும்” என குறிப்பிட்டுள்ளது.

இந்த பிரமாணப் பத்திரத்தில் காவிரி தீர்ப்பை நடைமுறைப்படுத்தக் கோரும் செயல் திட்ட வரைவு அறிக்கை தொடர்பான தகவல்கள் இடம்பெற்றுள்ளதா என கேள்வி எழுந்துள்ளது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், காவிரி வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருவதால் இரு மாநில விவசாயிகளுக்கிடையே பலத்த எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x