Last Updated : 24 May, 2018 07:32 PM

 

Published : 24 May 2018 07:32 PM
Last Updated : 24 May 2018 07:32 PM

ஸ்டெர்லைட் ஆலையை தொடர்ந்து நடத்த விரும்புகிறோம்: அனில் அகர்வால் பேட்டி

ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றம், தமிழக அரசாங்கம் ஆகியவற்றின் உத்தரவுக்குக் கட்டுப்பட்டு தொழில் நடத்துவோம் என ஸ்டெர்லைட் ஆலையின் உரிமையாளரும், வேதாந்தா குழுமத்தின் தலைவருமான அனில் அகர்வால் தெரிவித்துள்ளார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையால், சுற்றுச்சூழல் கேடு, மக்களுக்கு சுகாதாரக்கேடு ஏற்படுகிறது, ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் எனக் கோரி கடந்த 100 நாட்களாக ஆலையை அருகே வசிக்கும் அப்பகுதி மக்கள் போராட்டம் நடத்தினர் கடந்த 22-ம்தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக முற்றுகைப் போராட்டத்தின் போது மக்களுக்கும், போலீஸாருக்கும் ஏற்பட்ட மோதலில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 12 பேர் பலியாகினர். இந்தச் சம்பவத்துக்கு நாடு முழுவதும் பெரும் கண்டனங்கள் எழுந்துள்ளன, பல்வேறு அரசியல் கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்நிலையில், இது குறித்து வேதாந்தா குழுமத்தின் தலைவர் அனில் அகர்வால் ட்விட்டரில் வீடியோ வெளியிட்டு தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடக்கோரி மக்கள் நடத்திய போராட்டத்தில், 11 பேர் போலீஸாரால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் துரதிருஷ்டவசமானது, எதிர்பாராதவிதமாக நடந்துவிட்டது. இந்தச் சம்பவத்தை கேள்விட்டு மிகுந்த மனவருத்தமும், வேதனையும் அடைந்தேன். உறவுகளை இழந்துவாடும் மக்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபத்தைத் தெரிவிக்கிறேன்.

மக்களின் விருப்பத்தோடு ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். நீதிமன்றத்தில் இருந்தும், தமிழக அரசிடமும் இருந்து அனுமதி கிடைத்தவுடன் மீண்டும் முறைப்படி ஆலையைத் தொடங்குவோம். தற்போது ஆண்டு பராமரிப்பு பணிக்காக ஆலை மூடப்பட்டுள்ளது.

எங்கள் நிறுவனம் நீதிமன்றத்தின், மாநில அரசின் விதிமுறைகளைக் கண்டிப்புடன் பின்பற்றிச் செயல்பட்டு வருகிறது. தூத்துக்குடி மக்களின் மிகப்பெரிய வளர்ச்சி எங்களுடையது என்பதை அங்கிருக்கும் மக்களிடம் நாம் உறுதி செய்து இருக்கிறோம். ஸ்டெர்லைட் ஆலையைத் தொடர்ந்து நடத்த விரும்புகிறோம். சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதிலும், தூத்துக்குடி, தமிழகத்தின் வளர்ச்சியையும் நாங்கள் உறுதி செய்து இருக்கிறோம். நாங்கள் இந்தியாவின் சட்டத்தை மதிக்கிறோம். தூத்துக்குடியில் நடந்த சம்பவங்கள் எனக்கு மிகுந்த வேதனையை அளிக்கிறது என மீண்டும் தெரிவிக்கிறேன்

இவ்வாறு அகர்வால் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x