Published : 28 Jul 2024 07:42 AM
Last Updated : 28 Jul 2024 07:42 AM
புதுடெல்லி: அமர்நாத் புனித யாத்திரையைத் தடுக்க காலிஸ்தான் தீவிரவாத குழுக்கள் மூலம் பாகிஸ்தான் முயற்சி செய்து வருவதாக புலனாய்வு அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.
ஜம்மு-காஷ்மீரின் அமர்நாத் மலைக்குகையில் ஆண்டுதோறும் இயற்கையாகவே பனிலிங்கம் உருவாகிறது. இதைக் காண்பதற்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் காஷ்மீருக்கு வருகை தருகின்றனர். நடப்பாண்டில் இதுவரை 4 லட்சம் பக்தர்கள் கடந்த 28 நாட்களில் பனிலிங்கத்தைத் தரிசித்துள்ளனர். கடல் மட்டத்திலிருந்து 3,888 மீட்டர் உயரத்திலுள்ள மலையில் இந்த பனிலிங்கம் அமைந்துள்ளது.
இந்த பனிலிங்க யாத்திரை, ராணுவப் படையினரின் பாதுகாப்புடன் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த யாத்திரையைத் தடுக்க காலிஸ்தான் தீவிரவாத குழுவான பப்பர் கல்சா இன்டர்நேஷனலுடன், பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ அமைப்பும் இணைந்துமுயற்சித்து வருவதாக இந்தியஉளவு அமைப்புகள் எச்சரிக்கைவிடுத்துள்ளன.
யாத்திரைக்கு வரும் பக்தர்கள் மீது தீவிரவாதிகள் பெரியளவில் தாக்குதல் நடத்தி யாத்திரையைத் தடுப்பதே அவர்களது நோக்கம் என்று புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன. இதற்காக பஞ்சாப், டெல்லியிலுள்ள பாஜகதலைவர்கள், இந்து மதத் தலைவர்களையும் அவர்கள் குறிவைத்துள்ளதாகத் தெரிகிறது.
பக்தர்களின் புனித யாத்திரையின்போது பேரழிவுத் தாக்குதலை நடத்த பஞ்சாபை சேர்ந்த தீவிரவாத குழுக்கள், அவர்களின் நெட்வொர்க்குகள், தீவிரவாத அமைப்புகளை பயன்படுத்த முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கடந்த ஜூன் மாதத்தில் பதான்கோட் அருகே ஒரு கிராமத்தில் நவீன ரக ஆயுதங்களுடன் தீவிரவாதக் குழுவினர் சுற்றித் திரிந்ததாக, புலனாய்வு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனிடையே, பஞ்சாபில் வசிக்கும் இந்து மத போதகர் ஒருவருக்கு, காலிஸ்தான் தீவிரவாத அமைப்பிடமிருந்து மிரட்டல்கடிதமும் வந்துள்ளது. இதுதொடர்பாக பஞ்சாப் போலீஸார், எப்ஐஆர் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
புலனாய்வு அமைப்புகளின் எச்சரிக்கையைத் தொடர்ந்து அமர்நாத் பனிலிங்க தரிசன யாத்திரைக்குச் செல்லும் பக்தர்களுக்கு கூடுதல் பாதுகாப்பு அளிக்க ராணுவம் முடிவு செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT