போர் நடக்கும்போது கார்கிலுக்கு சென்று வீரர்களை உற்சாகப்படுத்திய மோடி! - பழைய ஆடியோ வைரல்
திராஸ்: கார்கில் போர் கடந்த 1999-ல் தீவிரமாக நடந்துகொண்டிருந்த காலகட்டத்தில் பாஜக பொதுச் செயலாளராக இருந்த நரேந்திர மோடி, போர்க் களத்துக்கே சென்று வீரர்களை உற்சாகப்படுத்தினார். இதுதொடர்பாக அவர் பேசிய பழைய ஆடியோ, வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் மோடி கூறியதாவது:
கார்கிலின் டைகர் மலையை இந்திய ராணுவ வீரர்கள் கைப்பற்றிய நாளில் அங்கு இருந்தேன். சுமார் 18,000 அடி உயரத்தில் ரத்தக் கறை படிந்த வீரர்கள் மத்தியில் நானும் அவர்களுக்கு உதவியாக பணியாற்றினேன். எனது பெருமைமிகு தருணங்களில் இதுவும் ஒன்று. குண்டுகள், துப்பாக்கி சத்தம் சூழ்ந்த இடத்தில் குர்தா - பைஜாமா அணிந்த இந்த மனிதருக்கு என்ன வேலை என்று வீரர்கள் என்னை பார்த்து வியந்தனர். ‘‘நான் உங்களை வாழ்த்த வந்தேன்’’ என்று கூறினேன்.
அப்போது ஒரு வீரர், “உங்கள் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், எங்களை வாழ்த்த வேண்டாம்; பிரதமர் வாஜ்பாயை பாராட்டுங்கள். அமெரிக்கா வருமாறு அதிபர் பில் கிளின்டன் அழைப்பு விடுத்தும், பிரதமர் வாஜ்பாய் ஏற்கவில்லை. இந்திய வீரர்கள் போர்க்களத்தில் இருக்கும்போது எங்கும் செல்ல மாட்டேன் என்பதில் உறுதியாக இருந்தார்” என்றார் அந்த வீரர். அவரது தேசப்பற்று, வாஜ்பாயின் சீரிய தலைமையை எண்ணி பெருமைப்படுகிறேன். இவ்வாறு அதில் மோடி கூறியுள்ளார்.
