Published : 13 May 2018 10:06 AM
Last Updated : 13 May 2018 10:06 AM

மஜதவுடன் கூட்டணி வைக்க தயக்கம் எதுவும் இல்லை: காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா கருத்து

கர்நாடகாவில் மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் (மஜத)கூட்டணி வைக்க தயக்கம் எதுவும் இல்லை என காங்கிரஸ் மூத்த தலைவர் ஆனந்த் சர்மா தெரிவித்துள்ளார்.

கர்நாடக தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்காது. மஜத கிங் மேக்கராக உருவெடுக்கும் என்று கருத்து கணிப்புகள் தெரிவித்துள்ளன. இந்நிலையில், மாநிலங்களவை காங்கிரஸ் துணைத் தலைவர் ஆனந்த் சர்மா சிம்லாவில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

பாஜக வேட்பாளர்களுக்கு செலவுக்காக கோடிக்கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது. முக்கிய தலைவர்களின் போக்குவரத்துக்காக ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்பட்டன. ஆக மொத்தம் பாஜகவின் தேர்தல் செலவு ரூ.15 ஆயிரம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதேநேரம், காங்கிரஸ் வேட்பாளர்களின் வீடுகளில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இந்த தேர்தலில் மத்திய அரசு இயந்திரம் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இதையும் மீறி காங்கிரஸ் வெற்றி பெறும். ஒரு வேளை பெரும்பான்மை கிடைக்காவிட்டால் மஜதவுடன் கூட்டணி வைக்கவும் காங்கிரஸ் தயங்காது. மதச்சார்பற்ற மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகளுடன் இணைந்து செயல்படுவது என காங்கிரஸ் கட்சி ஏற்கெனவே முடிவு செய்துள்ளது. அதில் எந்த மாற்றமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x