“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” - பிரியங்கா காந்தி ஆவேசம்

“இஸ்ரேல் பிரதமரும் அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை” - பிரியங்கா காந்தி ஆவேசம்
Updated on
1 min read

புதுடெல்லி: இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவும், அவரது அரசும் காட்டுமிராண்டித்தனமானவை என்று காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், “காசாவில் இனப்படுகொலை நடைபெறுகிறது. பொதுமக்கள், தாய், தந்தை, மருத்துவர்கள், செவிலியர்கள், உதவிப் பணியாளர்கள், பத்திரிகையாளர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், மூத்த குடிமக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான அப்பாவி குழந்தைகள் என அனைவரும் நாள்தோறும் அழிக்கப்பட்டு வருகிறார்கள். அவர்களுக்காக குரல் கொடுத்தால் மட்டும் போதாது.

வெறுப்பு மற்றும் வன்முறையில் நம்பிக்கையில்லாத இஸ்ரேலிய குடிமக்கள் உட்பட உலகில் உள்ள ஒவ்வொரு அரசாங்கமும், இஸ்ரேலிய அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகளைக் கண்டித்து அவர்களைத் தடுத்து நிறுத்துவதற்கு வற்புறுத்த வேண்டும்.

இதற்கான பொறுப்பு, சரியான சிந்தனையுள்ள ஒவ்வொரு தனிநபருக்கும் இருக்கிறது. நாகரீகம் மற்றும் ஒழுக்கத்தை வெளிப்படுத்தும் உலகில், இஸ்ரேலிய அரசின் செயல்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை. ஆனால், இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு அமெரிக்க நாடாளுமன்றத்தில் அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டல் கொடுப்பதைப் பார்க்க வேண்டிய நிலைக்கு நாம் உட்படுத்தப்படுகிறோம்.

காசாவில் நடக்கும் தாக்குதலை, “காட்டுமிராண்டித்தனத்திற்கும் நாகரிகத்திற்கும் இடையிலான மோதல்” என்று இஸ்ரேல் பிரதமர் அழைக்கிறார். அவர் சொல்வது முற்றிலும் உண்மைதான். அவரும் அவரது அரசாங்கமுமே காட்டுமிராண்டித்தனமானவை. அவர்களின் காட்டுமிராண்டித்தனத்திற்கு பெரும்பாலான மேற்கத்திய நாடுகள் அசாத்திய ஆதரவை அளிக்கின்றன. பார்ப்பதற்கு உண்மையிலேயே அவமானமாக இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in